கதிகலங்க வைத்த கருமுட்டை விற்பனை! விசாரணையை தீவிரப்படுத்தும் காவல்துறை! இவ்வளவு விசயம் நடந்துருக்கா?
ஈரோடு : தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக சேலம், ஓசூர் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் விசாரணைக்காக ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Recommended Video
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், தனக்கு 3 வயதில் பெண் குழந்தை இருந்தபோது கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். பின், வேறு ஒருவருடன் இரண்டாவதாக திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே இளம்பெண்ணின் மகள் 16 வயதினை எட்டியநிலையில், இரண்டாவது கணவர் அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இதற்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

கருமுட்டை விற்பனை
இந்நிலையில் அந்த இளம்பெண், தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மூலம் அச்சிறுமியின் பெயர் மற்றும் வயதை ஆதாரில் போலியான ஆவணங்கள் மூலம் தயாரித்துக் கொண்டு ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிறுமியின் கருமுட்டையை 8 முறைக்கு மேல் விற்பனை செய்து வந்துள்ளனர்.

ஈரோட்டில் அதிர்ச்சி
இதற்கிடையே சிறுமியின் வளர்ப்புத்தந்தை, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். இவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தவித்த சிறுமி இவர்களிடம் இருந்து தப்பித்து சேலத்தில் உள்ள நண்பர் மூலமாக, உறவினர் வீட்டுக்குச் சென்று, ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரிக்க சிறப்பு குழு
இதனையடுத்து, இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் தாய் , அவரது இரண்டாவது கணவர்,மற்றுமொரு இடைத்தரகர் பெண், ஆவணங்களை தயாரித்து கொடுத்த நபர் ஆகிய 4 பேரையும் போக்சோ சட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்துக்கொடுத்தல் எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் சம்மன்
இந்நிலையில் போலி ஆதார் மூலம் வேறு ஏதேனும் சிறுமிகளிடம் சட்ட விரோதமாக கருமுட்டை பெறப்பட்டதா என்பதை கண்டறிய, போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.முதற்கட்டமாக சேலம், ஓசூர் கிளை மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் நேரில் ஆஜராவதுடன், அங்கு கருமுட்டை வழங்கியோர் மற்றும் சிகிச்சை பெற்றவர்கள் விபரத்தையும் எடுத்து வர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications