தலித் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துவிட்டு.. தப்பியோடிய தலைமை ஆசிரியை.. அதிரடி கைது
ஈரோடு: ஈரோட்டில் அரசு தொடக்கப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து கொடுமைப்படுத்திய தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கையை தவிர்ப்பதற்காக தப்பியோடிய தலைமை ஆசிரியையை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை இரக்கமில்லாமல் இத்தகையை கொடுமைக்கு உள்ளாக்கிய அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலால் தெரியவந்த உண்மை
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை இருக்கும் இப்பள்ளியில் சுமார் 35 மாணவ - மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே, இப்பள்ளியில் படித்து வந்த மாணவன் ஒருவனுக்கு கடந்த 21-ம் தேதி கடுமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அப்போது ரத்தப் பரிசோதனை மேற்கொண்டதில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
இதையடுத்து, அவனிடம் எப்போதாவது கொசு கடித்ததா என மருத்துவர்களும், பெற்றோரும் கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவன், கடந்த வாரம் பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்த போது கொசுக்கள் கடித்ததாக கூறியுள்ளான். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர், "நீ ஏன் கழிவறையை சுத்தம் செய்தாய்" எனக் கேட்டுள்ளனர். அதற்கு அந்த மாணவன், பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி தான் தங்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக கூறினான். இதன் தொடர்ச்சியாக, ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட மாணவனின் புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த புகார் குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

எஸ்.சி. மாணவர்களை குறிவைத்து..
ஆட்சியரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று பெருந்துறை கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த மாணவர்கள், "நாங்கள் தினமும் காலையில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்துவிட்டு தான் வகுப்புக்கு செல்ல வேண்டும் என தலைமை ஆசிரியரை கீதாராணி கூறியுள்ளார்கள்" என கூறினர். மேலும், கழிவறையை பிளீச்சிங் பவுடர் போட்டு கழுவுவதால் கைகள் பொத்து போய் கொப்பளங்கள் ஏற்பட்டிருப்பதையும் அதிகாரிகள் கவனித்தனர். மேலும், எந்தெந்த மாணவர்கள் எல்லாம் கழிவறையை சுத்தம் செய்கிறார்கள் என பார்த்த போது, அதிகாரிகளுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அந்த மாணவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர். அப்போதுதான், குறிப்பிட்ட சமூக மாணவர்களை ஜாதி வன்மத்துடன் குறிவைத்து இத்தகைய கொடுமைக்கு தலைமை ஆசிரியை உள்ளாக்கி வருவது தெரியவந்தது.

அதிரடி கைது
இதனிடையே, கல்வித்துறை அதிகாரிகள் தன்னிடம் விசாரணை நடத்த வந்ததை முன்கூட்டியே அறிந்த தலைமை ஆசிரியை கீதாராணி தலைமறைவானார். இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் புகார் அளித்ததை தொடர்ந்து, கீதாராணி மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தனது உறவினர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த கீதாராணியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.