உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக.. தகிக்கும் ஈரோடு தேர்தல்! டெல்லி பறக்கும் தமிழ்மகன் உசேன் - என்னாச்சு?
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க தமிழ் மகன் உசேன் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அதிமுகவின் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் நாளை டெல்லி செல்கிறார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தனித்தனியாக அறிவித்து இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தமிழ் மகன் உசேனின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்த தேர்தல் ஆணையம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு திருமகன் ஈவேராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது. அதேபோல் தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, அமமுக வேட்பாளராக சிவபிரசாந்த் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

அதிமுகவின் தாமதம்
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளரை அறிவிக்காமல் இருந்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜகவின் முடிவுக்கு இரு தரப்பினரும் காத்திருந்ததும் இதற்கு காரணம் என தகவல் வெளியாகின.

எடப்பாடி, பன்னீர் அறிவித்த வேட்பாளர்
பாஜகவின் முடிவை கேட்ட பிறகே ஓ.பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.எஸ்.தென்னரசுவை ஈரோடு கிழக்கு வேட்பாளராக அறிவித்து உள்ளார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கில் , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி அதன் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பான ஆவணங்களை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் மகன் உசேன் கடிதம்
இந்த நிலையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், தென்னரசுவை அதிமுக வேட்பாளராக முன்மொழிந்துள்ளதாகவும், அதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதில் இன்று 7 மணிக்குள் வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறேன் அல்லது மறுக்கிறேன் என்ற விபரத்தை தெரிவிக்கவேண்டும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

டெல்லி செல்கிறார் உசேன்
இந்த கடிதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்த வேட்பாளர் செந்தில் முருகன் பெயர் இல்லாததற்கு அவரது அணியினர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை எதிர்த்து அவர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளார்கள். இந்த நிலையில் பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க தமிழ் மகன் உசேன் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications