சொன்னார்களே.. செய்தார்களா.. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை சுட்டிக்காட்டி பாயிண்ட் பாயிண்டாக விளாசிய விஜய்
ஈரோடு: ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆளும் திமுகவின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்தார். சொன்னார்களே செய்தார்களா? என பாயிண்ட் பாயிண்ட்டாக அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார். நவீன வசதிகள் இருந்தும் அவர்கள் (திமுக) வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 24 X 7அவர்களின் யோசனை என்னவென்றால் விஜயை எப்படி முடக்கலாம்.. தமிழக வெற்றிக் கழகத்தை எப்படியெல்லாம் முடக்கலாம் என்பது தான் அவர்களின் சிந்தனையாக உள்ளது என பரபரப்பாக குற்றம்சாட்டினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற்றது. விஜயமங்கலத்தில் இந்த மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் கட்சி தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
‛‛நம்முடைய கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்று உங்களுக்கு புரிகிறது. அது போதும் எனக்கு. இதை தவிர வேறு எதுவும் எனக்கு தேவையில்லை. நீங்கள் எல்லோரும் என்னுடைய அரசியலுடன் கனெக்டடாக இருக்கிறீர்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனக்கு அதுபோதும். அதனால் தான் எதிரிகள் யார் என்று கூறிவிட்டு நாங்கள் களத்துக்கு வந்துள்ளோம். அதுவும் எதிரிகள் யார் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம்.
சும்மா களத்தில் இல்லாதவர்களையோ, களத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்களையும் எதிர்க்க ஐடியா இல்லை பாஸ்.. நீங்கள் கேட்கிறீங்க என்பதற்காக எதிர்க்க முடியாது பாஸ். எங்களுக்கு நிறைய வேலை இருக்கு'' என்றார். இதன்மூலம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். யூடியூப், சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து தவெகவினரை சீண்டி வரும் நிலையில் விஜய் இப்படி பேசி சீமானுக்கு மறைமுகமாக பதில் கொடுத்துள்ளார்.
மேலும் விஜய் பேசுகையில், ‛‛பெரியார் பெயரை மட்டும் சொல்லிவிட்டு அவரது கொள்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.
மஞ்சளுக்கும் ஒன்றும் செய்யவில்லை. மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆராய்ச்சி மையம் என்று கோடிக்கணக்கில்டெண்டர் விட்டனர். பெயருக்கு கட்டடம் கட்டினார்கள். ஆனால் உலகமே போற்றி வாங்கும் மஞ்சளை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய என்ன செய்தார்கள் என்று யோசித்து பார்த்தால் அது பெரிய ஜீரோவாக தான் உள்ளது.
கரும்பு, நெல்லுக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது.அதுவும் ஒழுங்காக செய்வது இல்லை. நெல் கொள்முதல் செய்வதில் ஊழல். சரி நாம் கஷ்டப்பட்டு விளைவித்து வீணாக போகக்கூடாது என்று கேட்கும் லஞ்சத்தை கொடுத்தாலும் அதற்கு அப்புறம் கூட கொள்முதல் ஒழுங்காக நடப்பது இல்லை. மஞ்சளுக்கும் நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தரமான விதை கொடுக்க வேண்டும். இதையெல்லாம் யோசிக்கிறதுக்கு அவர்களுக்க நேரம் இல்லை.
24 X 7அவர்களின் யோசனை என்னவென்றால் விஜயை எப்படி முடக்கலாம்.. தமிழக வெற்றிக் கழகத்தை எப்படியெல்லாம் முடக்கலாம் என்பது தான் அவர்களின் சிந்தனையாக உள்ளது. தற்போது நவீன வசதிகள் இருந்தும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பவானி - நொய்யலாறு - அமராவதி இணைப்பு திட்டத்துக்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. இது அவர்களின் வாக்குறுதி நம்பர் 103. சொன்னார்களே செய்தார்களா..
இது பெரிய திட்டம் என்று வைத்து கொள்வோம். ஆறுகளை சுத்தப்படுத்த பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவோம் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை சுத்தப்படுத்துவோம் என்று சொன்னார்களே செய்தார்களா? ஆனால் ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் வேலையை கரெக்ட்டா செய்வாங்க.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் மற்ற மாவட்டங்களில் மணல் காணாமல் போனது மாதிரி.. மலைகள் காணாமல் போனது மாதிரி.. நம் மாவட்டத்தில் தனிவளம் கொடுத்த செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்புள்ளது மக்களே. நம் மண்ணுக்கும், ஆற்றுக்கும், விவசாயிகளுக்கும் தான் இந்த மோசமான நிலைமை.
இதனால் தொழில் செய்து பிழைக்கலாம் என்று பார்த்தால் எங்கு விடுகிறார்கள்.. நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலி பாக்கி. அரசு நம் நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த வேஷ்டி, சேலைக்கான கூலி கூட போராடி தான் வாங்க வேண்டி உள்ளது. அது சலுகையோ, உதவியோ, நலத்திட்டமோ கிடையாது. அது உழைப்புக்கான ஊதியம். அந்த நிலையில் தான் இந்த அரசு நம்மை வைத்துள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications