டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி, தேமுதிக.. அது என்ன டெபாசிட்.. எப்படி கணக்கிடப்படுகிறது?
சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட வாக்குகளை பெற முடியாவிட்டால் இந்த டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியாது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் இரண்டாம் இடம் பெற்றார். இவர்கள் இருவரை தவிர இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஏனைய 75 வேட்பாளர்களும் டெபாசிட்டை பறிகொடுத்தனர். டெபாசிட் தொகை என்பது என்ன? அது எத்தனை வாக்குகள் பெற்றால் திருப்பி கொடுக்கப்படும் என்ற விவரங்களை இங்கே காணலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியே போட்டியிட்டது. வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

77 வேட்பாளர்கள் போட்டி
அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ். ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தல் ஆணையம் அறிவித்தபடி கடந்த 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,27,547- வாக்காளர்கள் இருந்த நிலையில், 1,70,192 பேர் வாக்களித்தனர். மொத்தம் 74.9 % வாக்குகள் பதிவாகின. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.

தபால் வாக்குகள்
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் பதிவான 398 ஓட்டுக்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகள் பெற்றா.ர் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு 104 வாக்குகளும் நாம் தமிழர் கட்சிக்கு 10 வாக்குகளும் தேமுதிகவிற்கு ஒரு தபால் வாக்கும் கிடைத்தது. தபால் ஒட்டில் இருந்து முன்னிலை பெறத்தொடங்கிய ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை பெற்றார். ஒவ்வொரு சுற்றுக்களாக எண்ண எண்ண ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை எகிறத் தொடங்கியது.

டெபாசிட்டை பறிகொடுத்தவர்கள்
இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசு இருந்தார். அதிமுக டெபாசிட் பெறுமா என்று துவக்கத்தில் சில வாக்கு எண்ணிக்கையை கவனித்து வந்த மக்கள் சிலர் யோசிக்காமலும் இல்லை. இருந்தாலும் அடுத்தடுத்த சுற்றுக்களில் கணிசமான வாக்குகளை பெற்று வந்த தென்னரசு 10-வது சுற்றில் டெபாசிட்டை தக்க வைப்பதற்கான எண்ணிக்கையை தாண்டினார். இதைத்தவிர நாம் தமிழர் கட்சி மற்றும் தேமுதிக உள்பட ஏனைய அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

அது என்ன டெபாசிட்?
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டாக கட்ட வேண்டும். பொது பிரிவு வேட்பாளர் ரூ. 10 ஆயிரமும் எஸ்.சி எஸ்.டி பிரிவைச் சேர்ந்த வேட்பாளார் ரூ. 5000 டெபாசிட் தொகையாக கட்ட வேண்டும். குறிப்பிட்ட தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றால் மட்டுமே கட்டிய டெபாசிட் தொகையை திரும்பப் பெற முடியும். அதாவது ஒரு தொகுதியில் 6 ஆயிரம் வாக்குகள் பதிவாகி இருந்தால் அதில் ஆயிரம் வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திருப்பி கொடுக்கப்படும்.

28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும்
மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குளைப் பெறவில்லை என்றால் வேட்பாளர் கட்டிய டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது. அதன்படி, பார்த்தால் ஈரோடு கிழக்கு தொகுதியில் டெபாசிட் தொகையை தக்க வைக்க 28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த மேஜிக் எண்ணிக்கையை இரண்டு வெட்பாளர்களை தவிர வேறு யாரும் பெறவில்லை.

மக்களவை தொகுதிக்கு எவ்வளவு
மக்களவை தொகுதியை பொறுத்தவரை தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் வேட்பு மனு தாக்கலின் போது பொது பிரிவினர் ரூ.25 ஆயிரம் டெபாசிட் (வைப்புத்தொகை) ஆக கட்ட வேண்டும். பட்டியலித்தனவர்கள் ரூ.12,500 கட்ட வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படும். தோல்வி அடைந்தாலும் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திருப்பி அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications