இரு பெண்கள் காலுக்கு பாலிஷ் போட்ட பிரஷ்தான் எடப்பாடி மீசை.. உதயநிதி ஸ்டாலின் கடும் அட்டாக்
ஈரோடு கிழக்கு பிரசாரத்தில் எடப்பாடியை கடுமையாக உதயநிதி சாடி பேசினார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த உதயநிதி, எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகத் தாக்கினார். இரண்டு பெண்கள் செருப்புக்கு பாலிஷ் போட்டதுதான் எடப்பாடியின் மீசை என்று மிகக் கடுமையாகச் சாடினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சியில் இருந்து மறைந்த திருமகன் ஈவேரா தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

எடப்பாடி
அதேபோல அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தென்னரசுவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி திமுகவைக் கடுமையாக சினார். அப்போது அவர், "திமுக ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆன நிலையில், ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. இப்போது வீதி வீதியாக வாக்கு கேட்கும் அமைச்சர்கள், தேர்தலுக்கு முன்பு குறை கேட்க வந்தார்களா?

மீசை வைத்த ஆம்பளை
மக்களை ஏமாற்ற புரோட்டா போட்டும், டீ போட்டும் அமைச்சர்கள் ஏமாற்றுகிறார்கள். இவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய அமைச்சரானார்களா இல்லை.. டீ, போண்டா, புரோட்டா போட அமைச்சரானார்களா.. ஏழை வாக்காளர்களை, ஆடு, மாடுகளைக் கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்... மீசை வைச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டிய ஆம்பளையாக இருந்தால்.. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

உதயநிதி
அதிமுகவை எதிர்க்கத் தெம்பு, திராணி, சக்தி இல்லை. இதன் காரணமாகவே இப்படிச் செய்து வருகிறார்கள்" என்று கடுமையாகச் சாடியிருந்தார். எடப்பாடியின் பேச்சுக்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கிடையே திங்கள்கிழமை இரவு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி இந்த விவகாரத்திலும் எடப்பாடிக்கும் பதிலடி கொடுத்தார்..

கடும் தாக்கு
ஈரோடு கிழக்கு தொகுதியில் பேசிய உதயநிதி, "கலைஞரின் பேரன், பெரியாரின் பேரனுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். மகன் விட்டுச் சென்ற பணியைத் தந்தை தொடர வந்துள்ளார்.. அதிமுக வேட்பாளர் வாக்கு கேட்டுச் செல்லும் எல்லா இடங்களிலும் அவரை மக்கள் துரத்தி அடித்து வருகிறார்கள். அவரால் எங்கும் வாக்கு கேட்கவே செல்ல முடியவில்லை. அந்தளவுக்கு மக்கள் அதிமுக மீது கொந்தளிப்பில் உள்ளார். இதனால் வரும் தேர்தலில் நிச்சயம் வெல்லும். அதேபோல இங்குப் பிரசாரத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கும் வரவேற்பு இல்லை.

செருப்பிற்கு பாலிஷ் போட்ட மீசை
இதன் காரணமாகவே அவர் விரக்தியில் பேசி வருகிறார்.. ஈரோட்டில் பெரியார் மண்ணில் வந்து... சமூக நீதி காத்த மண்ணில் வந்து நின்று கொண்டு விரக்தியில் மீசை வைத்த ஆம்பளைய என்றெல்லாம் பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு மீசை வந்த பெருமை எங்களுக்குத் தெரியும் 2016இல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு.. தலைமைச் செயலகத்திலேயே சிபிஐ சோதனை செய்த போது வாய்க்கு ஜிப்பாக மாறியது அவரது மீசை.. கோடநாடு என்ற பெயரைக் கேட்டாலே காதுகளை மூடிக்கொள்கிறது அவரது மீசை. தூத்துக்குடியில் அப்பாவி மக்களின் கழுத்தை நெறிக்கும் கயிறாக இருந்தது அவரது மீசை. 2 பெண்களின் செருப்புக்கு - பாலிஷ் போட்டதுதான் எடப்பாடியின் மீசை..

ஷேவ் செய்யாமல் விட்டாலே போதும்
5,6 நாள் ஷேவ் செய்யாமல் விட்டாலே.. எல்லாருக்கும் தான் மீசை வரும். இதையெல்லாம் பேசி வருகிறார்" என்று கூறி எடப்பாடி முதல்வராக அறிவிக்கப்பட்ட போது கூவத்தூரில் எடுக்கப்பட்ட படத்தையும் அவர் எடுத்துக் காட்டினார். மேலும், கட்சி பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றால் பிரதமரைச் சென்று சந்திக்கும் எடப்பாடியும் ஓபிஎசும் ஒரு முறை கூட மக்கள் பிரச்சனைக்காகப் பிரதமரைச் சந்தித்து இல்லை என்று சாடினார்.

கடும் தாக்கு
தொடர்ந்து பேசிய அவர், "நான் சட்டமன்றத்தில் சொன்னேன்.. ஒரு முறை எடப்பாடி எனது காரில் தவறுதலாக ஏறப் போனார். அப்போது இது குறித்து சட்டசபையில்... கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என்று கூறினேன். இதற்கு அப்போதே எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை. அதேநேரம் ஓபிஎஸ் எழுந்து கமலாலயம் செல்ல மாட்டோம் என்றார்.. ஆனால், இப்போது பாருங்கள் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு கமலாலயத்தில் தான் நிற்கிறார்கள்" என்று கடுமையாகச் சாடினார்.












Click it and Unblock the Notifications