பிரதமரின் வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு; யூடர்ன் போட்ட அதிமுக...பல்டி அடித்த ஓபிஎஸ்
பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது தமிழகத்தை அப்போது ஆண்ட அதிமுகவினர் பலமாக ஆதரித்தனர். இந்நிலையில் பிரதமரின் அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றது பிரதரின் பெருந்தன்மை என வாழ்த்தி வரவேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண்சட்டங்களை மத்திய அரசு அதிரடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. எதிர்க்கட்சிகளின் குரலையும் கேட்காமல் மெஜாரிட்டி பலம் காரணமாக நிறைவேற்றப்பட்ட சட்டம் உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று சட்டமானது. இந்த மசோதாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அதிமுக, பாமக ஆதரித்து வாக்களித்தது. இது கடும் எதிர்ப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியது.

அதன் பின்னர் பாமக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திமுக தலைமையிலான அரசு கொண்டுவந்த வேளாண்சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தது. ஆனால் அதிமுக தொடர்ந்து பிடிவாதமாக வேளாண்சட்டத்துக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றவேண்டாம் என வாதம் செய்து பாஜகவுடன் சேர்ந்து வெளிநடப்பும் செய்தது. அன்று எடப்பாடி பழனிசாமி சபைக்கு வரவில்லை. ஓபிஎஸ்-முதல்வர் ஸ்டாலின் -முன்னவர் துரைமுருகன் இடையே வாக்குவாதம் நடந்தது. முடிவில் அதிமுக வெளிநடப்பு செய்தது.
திடீர் ரத்து அறிவிப்பு
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று திடீரென 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாகவும் நாடாளுமன்றத்தில் சட்டத்தை ரத்து செய்வோம் என அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழும் நிலையில் வேளாண்சட்டத்தை ஆதரித்து உறுதியாக நின்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சட்டத்தை வாபஸ் பெற்றதை வரவேற்று அறிக்கை விட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''விவசாயிகளின் வருமானம் பன்மடங்கு உயரும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், 2020ஆம் ஆண்டு விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் மற்றும் 2020ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் சேவைகள் சட்டம் என மூன்று சட்டங்கள் சென்ற ஆண்டு நாடாளுன்றத்தில் இயற்றப்பட்டன.
விவசாயிகளின் அச்சம்
இருப்பினும், இந்த மூன்று சட்டங்கள் மூலம், விளைபொருட்களில் பெரும் வணிக நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும் என்றும், விவசாயிகளின் நிலங்கள் பறிபோய்விடும் என்ற அச்சம் விவசாயிகளிடத்தில் இருக்கிறது என்றும், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்றும் தெரிவித்து ஓராண்டிற்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
விவசாயிகளின்பால் உள்ள பிரதமரின் அக்கறை, பெருந்தன்மை
இந்தச் சூழ்நிலையில், மேற்படி சட்டங்களில் உள்ள பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினரிடம் புரியவைக்க முடியவில்லை என்று தெரிவித்து மேற்படி சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியப் பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
இதற்காக அதிமுக சார்பில் பிரதமருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்''. இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications