இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லையே.. கர்நாடகாவிலிருந்து வெளியேறி.. ஓசூரில் குவியும் நிறுவனங்கள்.. அடடா!
ஓசூர்: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு முக்கிய புள்ளியாக ஒசூர் மாற தொடங்கி உள்ளது. "டி.என். ரைசிங் ஓசூர் முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு" நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. குறிப்பாக, அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்தும் தமிழ்நாட்டில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓசூரில் குவிந்த முதலீடுகள்
பெங்களூருவைச் சேர்ந்த செட்வொர்க் மேனுபாக்சரிங் பிசினஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ₹5,000 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை அமைக்க முன்வந்துள்ளது. இந்தத் திட்டம் சூரிய ஆற்றல் மதிப்புச் சங்கிலியைப் பெருக்கி, துணைத் தொழில்களான கண்ணாடி, பேக்ஷீட்கள், சில்வர் பேஸ்ட், இயந்திரங்கள் போன்றவற்றை ஊக்குவிக்கும். மேலும், பசுமை ஏற்றுமதிகள் மூலம் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும். இத்திட்டத்தின் மூலம் 3,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.
பெங்களூருவைச் சேர்ந்த HI-Q எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ₹425 கோடி முதலீடு செய்து பிசிபி (Printed Circuit Board) உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது. இதன் மூலம் 400 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வசதி மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி திறன்கள் மற்றும் உற்பத்தி உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
டி.என். ரைசிங் ஓசூர் முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு
ஏ.எஸ்.எம் டெக்னாலஜிஸ் லிமிடெட் ₹250 கோடி புதிய முதலீட்டில் ஒரு உற்பத்தி ஆலையை அமைக்க முன்வந்துள்ளது. இது மின்னணுவியல், குறைக்கடத்தி, சூரிய ஆற்றல் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களுக்கான உபகரணங்களின் வடிவமைப்பு சார்ந்த உற்பத்தியில் கவனம் செலுத்தும். இந்த ஒப்பந்தம் 1,100 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஜெட்டாவன் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கிருஷ்ணகிரியில் இ.எஸ்.டி.எம் (Electronics System Design and Manufacturing) வசதியை உருவாக்க ₹100 கோடி கூடுதல் முதலீடு செய்யவுள்ளது. இந்த திட்டம் 500 வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் இ.எஸ்.டி.எம் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும். இந்த வசதி மேம்பட்ட மின்னணு அமைப்புகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களில் கவனம் செலுத்தும்.
சென்னையைச் சேர்ந்த ஜே.எல்.கே ஆட்டோமேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் கிருஷ்ணகிரியில் துல்லியமான ஆட்டோமேஷன் இயந்திரங்களுக்கான உற்பத்தி வசதியை அமைக்க ₹100 கோடி முதலீடு செய்யும். இந்த திட்டத்தின் மூலம் 450 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஏ.எஸ்.எம் டெக்னாலஜிஸ் லிமிடெட், செட்வொர்க் மேனுபாக்சரிங் பிசினஸ் பிரைவேட் லிமிடெட், HI-Q எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பெங்களூரை சேர்ந்த நிறுவனங்கள் அங்கே தலைமையகம் இருந்தாலும், தங்களின் உற்பத்தி அலகுகளை ஓசூருக்கு மாற்றி உள்ளன. ஓலா நிறுவனம் போலவே.. ஓசூரில் நிலத்தின் மதிப்பு குறைவு என்பதால் ஓசூருக்கு மாறி உள்ளன. ஓலா நிறுவனம் தங்கள் தலைமையகத்தை பெங்களூரில் வைத்து இருந்தாலும் உற்பத்தி அலகுகளை ஓசூரில் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ஓசூருக்கு அடிக்கும் லக்
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னப்பள்ளி கிராமத்தில், ஒசூர் வர்த்தக மையம் அமைக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ₹60 கோடி மதிப்பீட்டில், 27.36 ஏக்கர் பரப்பளவில் இந்த மையம் அமையவுள்ளது.
இந்த திட்டத்தின் சாத்தியக்கூறுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) விரிவான ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வு முடிவடைந்த நிலையில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டமும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் வடிவமைக்கப்படவுள்ளது.
இந்த வர்த்தக மையமும், சர்வதேச விமான நிலையமும் இணைந்து ஒசூரின் ஏற்றுமதியையும், முதலீடுகளையும் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒசூர் ஒரு முக்கிய தொழில்துறை மையமாக வளர்ச்சி அடையும் எனத் தெரிகிறது. ஏற்கனவே ஓசூர் நகரம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. பல முக்கிய வளர்ச்சிப் பணிகள் தற்போது திட்டமிடப்பட்டுள்ளன. சில திட்டங்கள் கட்டுமானத்திலும் உள்ளன. கிட்டத்தட்ட பெங்களூர் நகரம் போல வளரும் வகையில் துரிதமான பணிகள் பல ஓசூரில் நடந்து வருகின்றன.
ஓசூர் அருகே விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரியகைப்-பாகலூர் அருகே அமையவுள்ளதாக தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வான்வெளியின் தடையற்ற மேற்பரப்பு (OLS) குறித்த விரிவான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications