அண்ணாமலை விதித்த 72 மணிநேர கெடு! 3 மாதமாக நீட்டித்த தமிழக பாஜக துணைத் தலைவர்
ஓசூர்: மூன்று மாதத்திற்குள் பெட்ரோல் டீசல் விலைக் குறைப்பு குறித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறை வேற்றவில்லை என்றால் சட்டமன்றம் முற்றுகையிடப்படும் என பாஜக மாநில துணை தலைவர் கே.பி.இராமலிங்கம் எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவரும் கோட்ட பொறுப்பாளருமான KP இராமலிங்கம் கலந்துக் கொண்டு ஆலோசனை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு மக்களின் மீதான அக்கறையின் காரணமாக பெட்ரோல் டீசல் விலையை ஏற்கனவே 4 ரூபாய் குறைத்து தற்போது 9 ரூபாய் 40 காசுகள் குறைத்துள்ளது.
மேலும் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களின் மாநில வரிகளை குறைத்துள்ளன. இதனால் பெட்ரோல் டீசல் விலை அங்கு மேலும் குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மாநில வரிகளை குறைக்க வில்லை. இதனால் உடனடியாக வரியினை குறைக்க வலியுறுத்தி 72 மணிநேர கெடு கொடுக்க பட்டது.
ஆனால் மாநில அரசு தேவையற்ற காரணங்களை கூறுகிறது. திமுக தேர்தலில் அளித்த பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்த வாக்குறுதிகளை மூன்று மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சட்டமன்றம் முற்றுகை போராட்டம் மட்டுமின்றி ஆட்சியை அகற்றும் போராட்டமாக நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "72 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.5 குறைக்காவிட்டால் 72 மணி நேரத்துக்குள் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தும்." என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications