புஷ்பா படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம்.. ஆக்ஷன் எடுத்த ஹைதராபாத் போலீஸ்.. 3 பேர் கைது
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. தெலங்கானாவில் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை காண்பதற்காக வந்து கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, திரையரங்க உரிமையாளர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் டிசம்பர் 5 ஆம் தேதி காலை ரிலீஸானது. புஷ்பா படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல், வசூலையும் வாரிக் குவித்தது. எனவே, புஷ்பா 2 திரைப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பிருந்தது.

இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படம் ரிலீஸாகிய மூன்றே நாட்களில் 600 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஹைதராபாத், சிக்கடப்பள்ளி பகுதியில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 படத்தின் சிறப்புக் காட்சி டிசம்பர் 4 ஆம் தேதி இரவு 9.40 மணிக்கு திரையிடப்பட்டது.
இந்த சிறப்புக் காட்சியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். அப்போது, எந்தவித முன்னறிவிப்புமின்றி நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும படக்குழுவினர் தியேட்டருக்கு வந்தனர். அப்போது, அல்லு அர்ஜுன் வந்திருப்பதை அறிந்த மக்கள் அவரைப் பார்ப்பதற்காக முந்தியடித்துக் கொண்டு சென்றனர்.
அப்போது, பால்கனி பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் 37 வயதான ரேவதி மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜ் ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு
மருத்துவமனையில் ரேவதி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது மகன் ஸ்ரீதேஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் வந்த நடிகர் அல்லு அர்ஜுன், படக்குழுவினர் மற்றும் திரையரங்கு மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக திரையரங்க உரிமையாளர் சந்தீப், மேலாளர் நாகராஜு, பால்கனி பொறுப்பாளர் ஸ்ரீகந்தகம் விஜய்சந்தர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications