“என் கேரக்டர் மீதான தாக்குதல் இது..” தெலுங்கானா முதல்வரின் விமர்சனத்திற்கு அல்லு அர்ஜுன் பதிலடி
ஹைதராபாத்: புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் குறித்து நடிகர் அல்லு அர்ஜூன் மீது தெலங்கான முதல்வர் விமர்சனங்களை அடுக்கியுள்ளார். இந்த விமர்சனத்திற்கு தற்போது அல்லு பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திர மக்களிடையே சினிமா நட்சத்திரங்களை கொண்டாடி தீர்க்கும் பழக்கம் தீவிரமாக இருக்கிறது. அதிரடி, இயற்பியல் விதியை மீறும் சண்டை காட்சிகள், எமோஷனல் ஆகிய கலந்த சினிமாக்களை மக்கள் வாரி அணைத்துக் கொள்கின்றனர். புஷ்பா -2 திரைப்படமும் அப்படித்தான் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் டிச.5ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் டிச.4ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சி வெளியானது.

சிறப்பு காட்சிக்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். அப்போது திடீரென அல்லு அர்ஜூன் தனது குடும்பத்துடன் சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு வருகை தந்திருந்தார். இதனால் தியேட்டருக்கு கூட்டம் அதிக அளவில் கூடியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய தியேட்டர் ஊழியர்கள் போலீசை அழைத்தனர். ஆனால் அதற்குள் அந்த துயர சம்பவம் நடந்தது. அதாவது படம் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்த ரேவதி எனும் பெண்மணி நெரிசலில் சிக்கி உயிரிழந்துவிட்டார்.
இதனால் தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தில் ரேவதியின் 9 வயது மகன் ஸ்ரீதேஜாவும் படுகாயமடைந்தார். தற்போது சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்ததை அடுத்து சந்தியா தியேட்டர் மேனேஜர், உரிமையாளர், பணியாளர்கள் உட்பட அல்லு அர்ஜூன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக மேனேஜர், பணியாளர்கள், உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இறுதியாக டிச.13ம் தேதி அல்லு அர்ஜூனை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடிய அல்லு அர்ஜூன் தரப்பு, அவருக்கு ஜாமீன் வாங்கியது. இருப்பினும் அல்லு அர்ஜூன் சில மணி நேரம் வரை சிறையில் இருந்தார். அவருடைய கைது நடவடிக்கையை எதிர்த்து திரை நட்சத்திரங்கள் பலரும் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "சில மணிநேரம் சிறையில் இருந்த அல்லு அர்ஜூனை சந்திக்க தெலுங்கு சினிமா இன்டர்ஸ்டிரியே போயிருக்கிறது. அல்லு அர்ஜூனுக்கு என்ன கை, கால், கிட்னி போய்விட்டதா? நெரிசலில் சிக்கி இறந்தது போன பெண் குறித்து கவலைபட்டீர்களா? அவரது மகனைக் குறித்து கவலைபட்டீர்களா? இந்த ஆதரவு மூலம் தெலுங்கு சினிமா உலகம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது? அல்லு அர்ஜூன் என்ன மாதிரியான மனிதர்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அல்லு அர்ஜூன், "என்னை சுற்றி ஏராளமான தவறான தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இப்படி சொல்வதன் மூலம் நான் யாரையும் குறைகூறுவதாக அர்த்தமல்ல. அரசியல் தலைவர்கள் பற்றி நான் குறை சொல்லவில்லை. ஆனால் என் மீதான விமர்சனங்கள் அவமானகரமானது. என் கேரக்டர் மீதான தாக்குதலாக இது இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications