தெலுங்கானா: ஆட்சி கனவில் பாஜக- அமித்ஷா பிரசார பொதுக் கூட்டத்துக்கு "லட்சம்" பேரை திரட்டுதாம்!
ஹைதராபாத்: சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா மாநிலம் வருகை தருகிறார். கம்மம் மாவட்டத்தில் நடைபெறும் அமித்ஷா தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்டுகிறதாம் பாஜக.
தெலுங்கானா சட்டசபைக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் கட்சி தமது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 115 இடங்களுக்கு பிஆர்எஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில எம்.எல்.ஏக்களை வரவழைத்து தொகுதி தொகுதியாக ஆய்வும் நடத்துகிறது பாஜக.
இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க மத்திய அமைச்சர் அமித்ஷா, வரும் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வருகை தருகிறார். அங்கிருந்து கம்மம் மாவட்டம் செல்லும் அமித்ஷா, பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் சுமார் லட்சம் பேரை திரட்டும் பணியில் பாஜக தீவிரமாக உள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரையில், 2 முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பிஆர்எஸ் அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. முதல்வர் கே.சந்திரசேகர ராவுக்கு எதிரான இந்த அதிருப்தி அலை பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்பது பாஜகவின் கனவு. ஆனால் தெலுங்கானா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள், பாஜக அல்லது காங்கிரஸுக்கு சாதகமாக இல்லை என்பது யதார்த்தம்.












Click it and Unblock the Notifications