"பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை எங்கு பார்த்தாலும் தாக்குங்கள்".. தெலுங்கானா காங். தலைவர் பேச்சு.. பதற்றம்
ஹைதராபாத்: முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை எங்கு பார்த்தாலும் தாக்குங்கள் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஃபெரோஸ் கான் பேசியிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா பாஜக எம்எல்ஏவாக இருக்கும் ராஜா சிங், சமீபத்தில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி நடத்திய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூக்கியைத் தாக்கிப் பேசும்போது நபிகள் நாயகம் குறித்து தரக்குறைவான கருத்துகளை கூறினார். மேலும், இந்த வீடியோவையும் அவர் வெளியிட்டார்.

இது, இஸ்லாமியர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ராஜா சிங்கை கைது செய்யக் கோரி ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவது தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் ராஜா சிங் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதே சமயத்தில், எம்எல்ஏ ராஜா சிங்கை கட்சியில் இருந்தும் பாஜக இடைநீக்கம் செய்தது.
இதையடுத்து, எம்எல்ஏ ராஜா சிங்கை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர். எனினும், சில மணிநேரங்களிலேயே அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ஃபெரோஸ் கான் இன்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில் அவர், "மக்களை பிளவுப்படுத்தி அரசியல் செய்ய பாஜக எம்எல்ஏ ராஜா சிங் விரும்புகிறார். நபிகள் நாயகம் எங்களுக்கு (இஸ்லாமியர்கள்) ஹீரோ போன்றவர். அவர் குறித்து அவதூறாக பேசியதற்காக ராஜா சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால், அவரை பார்த்த இடத்தில் தாக்குமாறு இஸ்லாமியர்களை நான் அறிவுறுத்துவேன். சட்டத்தை ஒரு முறை அல்ல; பல முறை கையில் எடுப்போம். இது மிரட்டல் இல்லை. எச்சரிக்கை" என ஃபெரோஸ் கான் கூறியுள்ளார்.
ஃபெரோஸ் கானின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications