அடுத்த 30 ஆண்டுகள் பாஜக ராஜ்ஜியம் தான்.. செயற்குழு கூட்டத்தில் முழங்கிய அமித் ஷா!
ஹைதராபாத்: இந்தியாவில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

நடப்பு ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், அடுத்த ஆண்டில் கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வியூகத்தை வகுப்பது முதலமைச்சர் வேட்பாளர், இதர வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக கூடிய கூட்டணி யூகங்களை உடைப்பது தொடர்பாக இதில் விவாதிப்பதற்காக பாஜக செயற்குழு கூடியுள்ளது.
தொடர்ந்து பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய தீர்மானமாக சர்வதேச அளவில் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதற்கு, அடுத்த 30 ஆண்டுகள் மத்தியிலும், பெரும்பாலான மாநிலங்களிலும் பாஜக அரசு ஆட்சியில் இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, இன்னும் சில ஆண்டுகளில் தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாஜக விரைவில் ஆட்சி அமைக்கும். இந்த இரு மாநிலங்களிலும் குடும்பக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு பாஜக முடிவு கட்டும். அதுமட்டுமல்ல, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. அதற்கான அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய அமித் ஷா, காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சியாக மாறிவிட்டது. தலைமையில் இருக்கும் குடும்ப நிர்வாகிகள், வரும் காலத்தில் ஏற்படும் நஷ்டங்களை கண்டு அஞ்சுவதால், இதுவரை புதிய தலைவரை தேர்வு செய்யாமல் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சிக்குள் ஜனநாயகத்திற்காக உறுப்பினர்கள் போராடினார்கள். அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜகவின் ஆட்சி தொடரும். இதனால் இந்தியா வலிமையான நாடாக மாறும் என்று பேசினார்.
தொடர்ந்து குஜராத் கலவர வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த பேசிய அமித் ஷா, குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது. பிரதமர் மோடி அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். எஸ்ஐடி விசாரணையை எதிர்கொண்ட போது, பொய் பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் பரப்பினர். ஆனால் உச்ச்நீதிமன்றம் அனைத்திற்கும் பதில் வழங்கியுள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications