முஸ்லீம் சபாநாயகரை வணங்கும் பாஜகவினர்.. காங்கிரஸை புகழ்ந்து சர்ச்சையில் சிக்கிய கர்நாடகா அமைச்சர்!
ஹைதராபாத்: கர்நாடகாவில் இஸ்லாமியரான சபாநாயகர் யுடி காதரை பார்த்து பாஜக எம்எல்ஏக்கள் வணக்கம் செல்லும் நிலையை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தி உள்ளது என தெலங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் கர்நாடகா அமைச்சர் ஜமீர் அகமது கான் பேசியிருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். கர்நாடகா சபாநாயகராக யுடி காதர் செயல்பட்டு வருகிறார். இவர் முஸ்லிம் ஆவார்.

அதேபோல் பெங்களூர் சாம்ராஜ்பேட்டை சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஜமீர் அகமது கான் கர்நாடகாவில் வீட்டு வசதி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.
இந்நிலையில் தான் தெலங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சித்தராமையா, டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கர்நாடகா அமைச்சரான ஜமீர் அகமது கான் தெலங்கானாவில் பிரசாரம் மேற்கொண்டார். அதன்பிறகு அவர் பொதுக்கூட்டத்தில் பேசியது விவாதத்தை கிளப்பி உள்ளது.
அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முஸ்லிம் தலைவர்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது பற்றி பேசினார். அதாவது தேர்தலில் 17 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 7 பேர் வெற்றி பெற்றனர். இதில் 5 தலைவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது என பேசினார்.
அதாவது நான் மற்றும் ரஹீம்கான் அமைச்சராக உள்ளோம். சலீம் அகமது கான் தலைமை கொறடாவாக உள்ளார். நசீர் அகமது அரசியல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது அமைச்சர் பதவிக்கு நிகரானது. மேலும் குறிப்பாக யுடி காதர் சபாநாயகராக உள்ளார். கர்நாடகாவில் முஸ்லிம் ஒருவர் சபாநாயகராக இருந்தது இல்லை என்ற நிலையை காங்கிரஸ் கட்சி மாறி உள்ளது.
மேலும் சட்டசபையில் பாஜகவினர் சபாநாயகர் யுடி காதரை பார்த்தவுடன் மரியாதை கொடுக்க வேண்டும். யுடி காதரை பார்த்தவுடன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று ‛நமஸ்கார் சார்' (வணக்கம்) என கூறும் நிலையை காங்கிரஸ் ஏற்படுத்தி உள்ளது. இதனால் முஸ்லிம் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் ஜமீர் அகமது கானின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பி உள்ளது. அதாவது பொதுவாக யார் சபாநாயகராக இருந்தாலும் கூட சட்டசபையில் முதல்வர், எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து வணக்கம் செலுத்த வேண்டும் என்பது மரபாக உள்ளது. இத்தகைய சூழலில் ஜமீர் அகமது கான் அதற்கும் மதசாயம் பூசி பேசியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இதற்கிடையே தான் ஜமீர் அகமது கானின் பேச்சுக்கு ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛அமைச்சர் ஜமீர் அகமது கான் இவ்வளவு கீழ்த்தரமான பேசுவார் என எதிர்பார்க்கவில்லை. அவரது பேச்சால் கர்நாடகா குளிர்கால சட்டசபை கூடடத்தொடரில் சபாநாயகரை பார்த்த பாஜகவினர் எழுந்து நிற்கப்போவது இல்லை என்ற முடிவுக்கு வந்தால் சட்டசபையின் மாண்பு என்னவாகும்? முதலமைச்சருக்கு அறிவு இருந்தால் ஜமீர் அகமது கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications