பிரபல பேஷன் டிசைனர் பாத்ரூமில் மர்ம மரணம்.. ரூமில் இருந்த ‘சிலிண்டர்’.. மரணத்தில் போலீசார் சந்தேகம்!
ஹைதராபாத் : பிரபல ஃபேஷன் டிசைனர் பிரத்யுஷா கரிமெல்லா ஹைதராபாத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா, தனது வீட்டின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரத்யுஷாவின் படுக்கையறையில் கார்பன் மோனாக்சைடு சிலிண்டரை கைப்பற்றியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஃபேஷன் டிசைனர்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரத்யுஷா கரிமெல்லா அமெரிக்காவில் ஃபேஷன் டிசைனிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் ஆடை வடிவமைப்பாளர் பணியைத் தொடங்கினார். அவர் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர் - நடிகைகளிடமும் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

குளியலறையில்
ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரத்யுஷா வசித்து வந்த நிலையில், அவரது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் பிரத்யுஷாவை சடலமாக மீட்டனர். பிரத்யுஷா வீட்டின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

தற்கொலை கடிதம்
பிரத்யுஷா எழுதிய தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், 'நான் தனிமையான வாழ்க்கையை வாழ்கிறேன். நான் இனியும் வாழ விரும்பவில்லை. எனது பெற்றோருக்கு சுமையாக நான் இருக்க விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள்" என எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வீட்டில் தனியாக இருந்த பிரத்யுஷா உயிரிழந்துள்ளதால் இந்த மரணத்திற்கு வேறு ஏதும் காரணங்கள் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசார் சந்தேகம்
மேலும், பிரத்யுஷாவின் அறையில் கார்பன் மோனாக்சைடு சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அதை அவர் சுவாசித்ததால் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அவரை யாராவது அதனை சுவாசிக்க வைத்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சந்தேக மரணம்
போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பிரதியுஷாசின் ஷாப்பிங் விவரங்கள், தொலைபேசி உரையாடல்கள் போன்றவற்றை போலிஸார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

மன உளைச்சல்
பிரத்யுஷா கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவரது மரணத்திற்கு வேறு யாரும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications