ஆந்திரா+ தெலுங்கானா.. பாஜவுக்கு கைகொடுக்குமா தெலுங்கு மாநிலங்கள்? ஜீ நியூஸ் கருத்துக்கணிப்பு
ஹைதராபாத்: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தெலுங்கு பேசும் மாநிலங்களான, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்பது குறித்த ஜீ நியூஸ் - மேட்ரைஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22ஐ கைப்பற்றியது. எதிர் முனையில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வெறும் 3 தொகுதிகளில் சுருண்டது. இந்த முறை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும் என்று ஜீ நியூஸ் - மேட்ரைஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.

அதேபோல 6 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கைகோர்த்து பாஜக இந்த முறை தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த என்டிஏ கூட்டணிக்கு 13 தொகுதிகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
தெலங்கானாவை பொறுத்த அளவில், மொத்தமுள்ள 17 தொகுதிகளில் 9-ஐ காங்கிரஸ் கைப்பற்றும். பாஜக 5 தொகுதிகளிலும், பிஆர்எஸ்(டிஆர்எஸ்) 2 தொகுதிகளிலும், அசாதுதின் ஓவைசியின் மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி 1 தொகுதியிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிஆர்எஸ்(டிஆர்எஸ்) 9 தொகுதிகளை வென்றிருந்தது. அதேபோல, பாஜக 4, காங்கிரஸ் 3, அசாதுதின் ஓவைசியின் மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சி 1 என கைப்பற்றியிருந்தது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இந்த முறை பிஆர்எஸ் பின்னுக்கு தள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications