கார்ப்பரேட்களுக்கு எதிரான 8 ஆண்டு போராட்டம்! "நாம் ஜெயிச்சிட்டோம்!" பெண் மருத்துவர் நெகிழ்ச்சி வீடியோ
ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ், தனி நபராகப் போராடி ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார். பல ஆண்டுகளாகச் சர்க்கரை பானங்கள் ஓஆர்எஸ் என்று சொல்லி விற்கப்பட்ட நிலையில், சிவரஞ்சனி சந்தோஷின் போராட்டத்தால் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சர்க்கரை நிறைந்த பானங்களை பல்வேறு நிறுவனங்கள் ஓஆர்எஸ் எனப்படும் oral rehydration solutions என்று விற்று வந்தது. இருப்பினும், அது தவறானது என்பதால் சிவரஞ்சினி இது தொடர்பாகத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். இந்தச் சூழலில் தான் ஓஆர்எஸ் விவகாரத்தில் ஒரு முக்கிய ஒழுங்குமுறை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய உத்தரவு
அதாவது இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு உணவுப் பொருளையும் 'ORS' என்று சொல்லி விற்கக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான உத்தரவு கடந்த அக்டோபர் 14ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில் ஓஆர்எஸ் தொடர்பாக உணவு நிறுவனங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இது தொடர்பாகக் கடந்த ஜூலை 14, 2022 மற்றும் பிப்ரவரி 2, 2024ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. அந்த உத்தரவுகள் 'ORS' என்ற பெயரை மார்கெட்டிங்கிற்காக பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது.
விளக்கம்
இந்த உத்தரவுக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 15ம் தேதி FSSAI ஒரு விரிவான விளக்கத்தைக் கொடுத்திருந்தது. உரிய பார்முலாவை பின்பற்றி உருவாக்கப்படாத உணவுப் பொருட்களை 'ORS' என்ற சொல்லி விற்பது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்ட விதிமுறைகளை மீறுகிறது என்றும் இது பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாக ஒழுங்குமுறை ஆணையம் கூறியது.
தனி ஆளாகப் போராட்டம்
இந்த விவகாரத்தில் கிட்டத்தட்டத் தனி ஆளாக ஹைதராபாத் மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ் போராடி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அவர் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், 2022ல் இது தொடர்பாகத் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கும் தொடர்ந்தார். WHO பரிந்துரைத்த எலக்ட்ரோலைட் மற்றும் குளுக்கோஸ் தரநிலைகளை பூர்த்தி செய்யாதவற்றை ORS என்று தவறாக விளம்பரப்படுத்தி விற்கக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.
பின்னணி
பல நிறுவனங்கள் சாதாரண ஜீஸ் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களை ஓஆர்எஸ் என விற்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது குழந்தைகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தை அப்போதைய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளரான ராஜேஷ் பூஷனிடமும் கொண்டு சென்றார். இடையில் தெலுங்கான உயர் நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தது.
முதலில் 2022ம் ஆண்டிலேயே 'ORS' என்ற சொல்லைப் பயன்படுத்த சில கட்டுப்பாடுகளை FSSAI வெளியிட்டது. இருப்பினும், சில மாதங்களில் அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் தனது சட்ட போராட்டத்தைத் தொடர்ந்தார் சிவரஞ்சனி சந்தோஷ். இப்போது சுமார் 3 ஆண்டுகள் கழித்து இதற்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங் வீடியோ
இந்த உத்தரவு வந்தவுடன் இது தொடர்பாக டாக்டர் சிவரஞ்சனி தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் FSSAI உத்தரவு பல வருட தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவு எனக் குறிப்பிட்டார். அவர் மேலும், "இது ஒரு போர். எட்டு வருடப் போர்.. அலட்சியத்திற்கு எதிரான போராட்டம். இந்த வெற்றி என் ஒருவருக்கு மட்டும் சொந்தமானது அல்ல.. மாறாக மக்களின் சக்திக்கு சொந்தமானது. இந்த விவகாரத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் சொந்தமானது" என்று கூறியுள்ளார்.
இதை பேசும்போது அவரால் தனது அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை. கண்ணீருடன் அவர் பேசிய இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
ஒஆர்எஸ்
ஒஆர்எஸ் பானத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. இதற்கு மாறாக, மருந்து நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு சுமார் 120 கிராம் சர்க்கரையைச் சேர்த்து அதை ஓஆர்எஸ் என விற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications