"எனக்கு கேன்சர்னு தெரியும்.. மம்மி டாடிக்கிட்ட சொல்லிறாதீங்க".. 6 வயது மழலையின் கண்ணீர்.. கலக்கம்!
ஐதராபாத்: தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என தெரிந்துகொண்ட 6 வயதே ஆன சிறுவன் ஒருவன், தனது அம்மா அப்பாவிடம் இதுகுறித்து கூற வேண்டாம் என மருத்துவரிடம் வேண்டுகோள் விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவரே கண்ணீருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வெறும் 6 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன், தனக்கு வந்த கொடுமையான நோயை பற்றி கூட கவலைப்படாமல் தனது தாய் தந்தையின் மனம் நோகக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியது அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.

மூளையில் கேன்சர்
தெலங்கானா மாநிலம் ஐதாராபாத்தைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியர் 8 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள அப்போலோ மருத்துவமனைக்கு தங்கள் 6 வயது மகனை அழைத்து வந்தனர். தீராத தலைவலி, தலைசுற்றல் ஆகிய பாதிப்புகளுடன் தனது மகனை அழைத்து வந்திருக்கின்றனர். அவனை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, சிறுவனின் மூளையின் முக்கியமான நரம்பில் புற்றுநோய் கட்டி வந்திருப்பது தெரியவந்தது.

மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை
இதையடுத்து, இந்த விஷயத்தை சிறுவனின் பெற்றோரிடம் மருத்துவர் தனியாக அழைத்து கூற, அவர்கள் கதறி அழுதனர். மேலும், முக்கியமான மூளை நரம்பில் புற்றுக் கட்டி உள்ளதால், அதை ஆபரேஷன் செய்து அகற்ற வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார். ஆனால் இது மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது. இதையடுத்து, அடுத்த சில தினங்களிலேயே அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கட்டி அகற்றப்பட்டாலும், சில மூளை நரம்புகள் துண்டிக்கப்பட்டதால் அவனுக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படுவதும், பக்கவாத பாதிப்புகளும் ஏற்பட்டன.

"மகனிடம் கூறாதீர்கள் டாக்டர்"..
இதையடுத்து, அதே மருத்துவமனையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவரான சுதீர் குமார் என்பவரிடம் அந்த சிறுவன் சிகிச்சை பெற்றுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. இந்த மருத்துவர்தான், ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை பகிர்ந்துள்ளார். இனி அவரது வார்த்தைகளில் இருந்து. "முதலில் அந்த சிறுவனின் பெற்றோர்தான் என்னை வந்து பார்த்தனர். அப்போது அவர்கள், மகனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. ஆனால் அவனிடம் அதை கூற வேண்டாம். வலிப்புக்கும், பக்கவாதத்திற்கும் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப் போகிறீர்கள் என்பதை மட்டும் கூறுங்கள்" என வேண்டுகோள் விடுத்தனர்.

"மம்மி டாடிட்ட சொல்லிடாதீங்க, ப்ளீஸ்"..
அவர்கள் வெளியே சென்ற பிறகு, அந்த சிறுவன் வீல் சேரில் உள்ளே வந்தான். மற்ற புற்றுநோய் நோயாளிகளை போல அல்லாமல், முகம் நிறைய நம்பிக்கையும், தைரியமும் அவனிடம் இருந்தது. அவனிடம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பாக மழலை சொல்லில் பேச ஆரம்பித்தான் அந்த சிறுவன். "டாக்டர் எனக்கு மூளையில் கேன்சர் 4-ம் நிலையை தாண்டிவிட்டது. எனது மருத்துவ அறிக்கையை கூகுள் செய்து பார்த்தேன். நான் 6 மாதங்கள்தான் வாழப்போகிறேன் எனத் தெரிந்துகொண்டேன். ஆனால், என் மம்மி டாடிக்கு எனக்கு கேன்சர் வந்திருப்பது தெரியாது. தெரிந்தால் நொறுங்கி போயிடுவாங்க. என்னை அவங்க ரொம்ப லவ் பன்றாங்க. ஸோ.. ப்ளீஸ் அவங்கள்ட்ட எனக்கு கேன்சர் இருக்குன்ற விஷயத்தை கூற வேண்டாம்" என அந்த சிறுவன் என்னிம் கூறினான்.

"பெற்றோர் மட்டும் வந்தனர்"
இதை கேட்டு நான் கண் கலங்கிவிட்டேன். பின்னர் அவனது பெற்றோரை அழைத்து அவன் கூறியதை தெரிவித்தேன். அவர்கள் இருவரும் தேம்பி தேம்பி அழுதார்கள். இந்த வேதனையான தருணத்திலும் மகன் தங்களை பற்றி கவலைக் கொள்கிறானே.. என அவர்கள் கூறி அழுதனர். பின்னர் கண்களை துடைத்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் அவர்களை நான் பார்ககவில்லை. பின்னர் 8 மாதங்கள் கழித்து, அவனது பெற்றோர் மட்டும் என்னை பார்க்க வந்தார்கள். "டாக்டர்.. என் மகனின் சந்தோஷத்திற்காக நாங்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுத்து அவனிடம் நேரத்தை செலவிட்டோம். அவனுக்கு இருக்கும் பாதிப்பு எங்களுக்கு தெரியாது என்று என நினைத்து அவனும் எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுக்கு பிடித்த டிஸ்னி லேண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு அவனை கூட்டிச் சென்றோம். பின்னர் நாங்கள் பயத்துடன் எதிர்பார்த்த அந்த துயர நாளும் வந்தது. எங்கள் மகன் எங்களை விட்டு பிரிந்துவிட்டான். நீங்கள் செய்த உதவிக்கு நன்றி" என அவர்கள் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் சென்று ஒரு வாரம் ஆகிறது. இன்னும் அந்த சிறுவன் மழலை மொழி மாறாமல் கூறிய வார்த்தை எனது காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. "மம்மி டாடிட்ட சொல்லிடாதீங்க டாக்டர், ப்ளீஸ்" என்ற வார்த்தைதான் அது. இவ்வாறு அந்த மருத்துவர் ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications