"இந்திரா” பாணியில் தெலுங்கானா கம்மம் தொகுதியில் “பிரியங்கா காந்தி”? இன்று அதிரடி அறிவிப்பு?
ஹைதராபாத்: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாணியில் தெலுங்கானாவின் கம்மம் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 17 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 13-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 17 தொகுதிகளிலும் தற்போது வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பிஆர்எஸ் மற்றும் பாஜக இடையேதான் போட்டி. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, சிபிஎம் கட்சியும் களத்தில் உள்ளன.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் "இந்திரா" காந்தி ராஜ்ஜியம் அமைப்போம் என பிரசாரத்தை முன்னெடுத்து வென்றது காங்கிரஸ். 1980-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் தெலுங்கானாவின் மேடக் தொகுதியில் போட்டியிட்டார். ரேபரேலியில் வென்றாலும் ராஜினாமா செய்துவிட்டு மேடக் தொகுதி எம்பியாக இருந்தார். 1984-ல் இந்திரா காந்தி அம்மையார் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது மேடக் தொகுதி எம்பியாகவே மரணித்தார். இந்த சென்டிமெண்ட் இன்னமும் தெலுங்கானாவில் அலையாக ஆழப் பதிந்திருக்கிறது.
தற்போது இதே பாணியில் இந்திராவின் பேத்தியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியை தெலுங்கானாவில் களமிறக்குவது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கானாவின் கம்மம் லோக்சபா தொகுதியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்துவதற்கு காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தென்னிந்தியாவின் கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே நேரத்தில் வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளது. ராகுல் காந்தி பாணியில் வட மற்றும் தென்னிந்தியா தொகுதிகளில் பிரியங்கா காந்தியை களமிறக்கலாம் என்பது காங்கிரஸ் திட்டம். அதாவது உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் தெலுங்கானாவின் கம்மம் லோக்சபா தொகுதிகள் இரண்டிலும் பிரியங்கா காந்தியை களமிறக்கலாம் என நினைக்கிறதாம் காங்கிரஸ் மேலிடம். இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகக் கூடும் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications