எதிர்க்கட்சி அணியில் குழப்பம் : ராகுல் அட்டாக் செய்யும் கேசிஆருடன் அகிலேஷ் யாதவ் 'லஞ்ச்' மீட்டிங்!
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர ராவை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று ஹைதராபாத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். ஆனால் காங்கிரஸை பரம எதிரியாக நினைக்கும் தெலுங்கானா முதல்வர் கேசிஆருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தெலுங்கானா சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜகவின் பி டீம் என கடுமையாக விமர்சித்திருக்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இந்நிலையில் தனி விமானத்தில் இன்று தெலுங்கானாவின் ஹைதராபாத் வருகை தந்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவ அகிலேஷ் யாதவ். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் சீனிவாஸ் யாதவ் வரவேற்றார். பின்னர் முதல்வர் கேசிஆரின் அதிகாரப்பூர்வ இல்லமான பிரகதி ஹவுஸுக்கு அகிலேஷ் யாதவ் சென்றார். அங்கு முதல்வர் கேசிஆர், அகிலேஷ் யாதவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் மதிய உணவு விருந்தில் இணைந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர்.

முன்னதாக ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். பாஜகவை வீழ்த்துவதுதான் கேசிஆர் மற்றும் எங்களது இலக்கு. பாஜகவை வீழ்த்துவதற்கான வழிகள் தொடர்பாக கேசிஆருடன் ஆலோசித்துவிட்டு தெரிவிக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications