பிரதமர் அவர்களே.. இஸ்லாமியர்கள் தான் ஆணுறைகளை அதிகம் யூஸ் பண்றாங்க.. ஓவைசி பரபர பேச்சு
ஹைதராபாத்: இந்தியாவிலேயே முஸ்லீம்கள் தான் அதிகமாக ஆணுறைகளைப் பயன்படுத்துவதாக மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசி கூறியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
லோக்சபா தேர்தலில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்னும் 5 கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கிடையே ஹைதராபாத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஓவைசி கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓவைசி: அதிக குழந்தை பெறுபவர்கள் என்று பிரதமர் மோடி, முஸ்லீம்களை மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் பேசியதாகக் சாடிய ஓவைசி, முஸ்லீம்கள் தான் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார். மோடியின் கேரண்டி என்பது ஒன்று தான் என்று கூறிய அவர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களை வெறுப்பது தான் அவரது கேரன்டி எனச் சாடியுள்ளார்.
ஹைதராபாத் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஓவைசி, "முஸ்லீம்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்று சொல்லி ஏன் அச்சத்தை உருவாக்குகிறீர்கள்? முஸ்லிம் மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறைந்தே இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை மோடி அரசு கொடுத்துள்ள அதிகாரப்பூர்வ டேட்டா இதைத் தான் சொல்கிறது. முஸ்லிம்கள் தான் ஆணுறைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள், இதைச் சொல்வதில் எனக்கு வெட்கம் எதுவுமில்லை.
அச்சம்: முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகமாகிவிடும் என்று இந்துக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கிறார் நரேந்திர மோடி.. எவ்வளவு காலம் இப்படி முஸ்லீம்கள் குறித்த தேவையில்லாத அச்சத்தை மக்களிடையே உருவாக்கப் போகிறீர்கள்? நாங்கள் வேறு மதத்தைச் சேர்ந்தவர்களா இருக்கலாம். ஆனால், எங்கள் நாடு இதுதான்" என்று ஆவேசமாகப் பேசினார்.
பிரதமர் மோடி பேசியது என்ன: ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, நாடு முழுக்க உள்ள பொதுமக்களின் சொத்துகளைக் கணக்கிட்டு அதைப் பகிர்ந்தளிக்க உள்ளதாகக் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி மக்களின் தங்கத்தைக் கூட கணக்கிடுவோம் என்று கூறுகிறார்கள். அந்தச் சொத்தைப் பங்கிட்டுக் கொடுப்பார்களாம்.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட நாட்டின் அனைத்து வளங்களிலும் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று கூறியது அனைவருக்கும் நினைவில் இருக்கும் என நினைக்கிறேன்.
ஓவைசி: அப்படி சொத்தை பகிர்ந்து கொடுத்தால் அது யாருக்கு விநியோகிக்கப்படும்? அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு தானே விநியோகிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்கு விநியோகிக்கப்படும். நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்குச் செல்ல வேண்டுமா?" பிரதமர் மோடி பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக காங்கிரஸ் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றியது. இந்தச் சூழலில் தான் இப்போது ஓவைசியும் விமர்சித்து பேசியுள்ளார்.
ஹைதராபாத் தொகுதி: மஜ்லீஸ் கட்சி தலைவரான ஓவைசி தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஹைதராபாத் தொகுதி என்பது மஜ்லீஸ் கட்சியின் கோட்டையாகவே கருதப்படுகிறது. கடந்த 1984ஆம் ஆண்டு அவரது தந்தை சலாவுதீன் ஒவைசி, காங்கிரஸுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக மஜ்லீஸ் கட்சியைத் தொடங்கினார். அப்போது முதலே அவர்கள் கட்சி தான் அங்கு வென்றுள்ளது.
1984 முதல் 1999 வரை ஹைதராபாத் லோக்சபாவுக்கு நடந்த 6 தேர்தல்களிலும் சலாவூதின் ஓவைசி தான் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2004 முதல் 2019 வரை 4 தேர்தல்களிலும் அசாதுதீன் ஓவைசி வென்றுள்ளார். இந்த முறை ஓவைசிக்கு எதிராக பாஜகவின் மாதவி லதா, பிஆர்எஸில் இருந்து சீனிவாஸ் யாதவ், காங்கிரஸில் இருந்து முகம்மது சமீர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications