கசந்த காதல் திருமணம்.. 3வது மனைவியான ரஷ்ய நடிகையை பிரிந்த நடிகர் பவன் கல்யாண்? விரைவில் விவாகரத்து!
ஹைதராபாத்: பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தனது 3வது மனைவியான ரஷ்யாவை சேர்ந்த நடிகையான அன்னா லெஷ்னேவாவை பிரிந்து விட்டதாகவும், விரைவில் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் பவன் கல்யாண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். சினிமாவில் ஜொலித்த பவன் கல்யாணை அவரது ரசிகர்கள் ‛பவர் ஸ்டார்' என அழைக்க தொடங்கினர்.

அதன்பிறகு சினிமா துறையில் இருந்து பவன் கல்யாண் அரசியலில் நுழைந்தார். அண்ணன் சீரஞ்சிவியின் பிராஜா ராஜ்யம் கட்சியில் யுவராஜ்யம் தலைவராக செயல்பட்டார். தீவிரமாக பிரசாரம் செய்தார். அதன்பிறகு இந்த கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டது. இதையடுத்து பவன் கல்யாண் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
அதன்பிறகு பவன் கல்யாண் புதிதாக கட்சியை தொடங்கினார். 2014ல் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை துவங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆந்திரா அரசியலில் தற்போது அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே தான் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பல்பபடுத்தும் பணியை தொடங்கி உள்ளார்.
பவன் கல்யாண் திரைத்துறை, அரசியலில் இருக்கும் நிலையில் அவரது திருமண வாழ்க்கை என்பது அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருகிறது. முதலாவதாக பவன் கல்யாண் 1997 ல் நந்தினி என்பவரை திருமணம் செய்தார். அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. நடிகையும், மாடலுமாக இருந்த ரேணு தேசாயுடன், பவன் கல்யாண் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதாக பரவிய தகவல் இருவருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியது.
இதையடுத்து நந்தினியை முறைப்படி பவன் கல்யாண் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ரேணு தேசாயை 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை 3 ஆண்டுகள் நீடித்த நிலையில் 2012ல் விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு ரஷ்யாவை சேர்ந்த நடிகையான அன்னா லெஷ்னேவாவை பவன் கல்யாண் திருமணம் செய்தார். டீன் மார் படப்படிப்பின்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.
இதையடுத்து இருவரும் திருமணம் கடந்த 2013ல் நடந்தது. இருவரும் ஹைதராபாத்தில் உள்ள சப் - ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு போலினா அஞ்சனா பவானோவா என்ற மகளும், மார்க் சங்கர் பவானோவிச் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தான் பவன் கல்யாண் - அன்னா லெஷ்னேவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சமீபகாலமாக அன்னா லெஷ்னேவா, பவன் கல்யாண் மற்றும் அவரது குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்றாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் என்பது பவன் கல்யாண் மற்றும் அன்னா லெஷ்னேவா ஆகியோர் தனித்தனியே பிரிந்து வாழ்வது தான் என சொல்லப்படுகிறது. மகன், மகளுடன் அன்னா லெஷ்னேவா, பவன் கல்யாணை விட்டு பிரிந்து தனியே வசிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இவர்கள் பிரிந்து வாழும் நிலையில் விரைவில் இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினு்ம் பிரிந்து வாழ்வது பற்றியும், விவாகரத்து குறித்தும் பவன் கல்யாண் மற்றும் அன்னா லெஷ்னேவா தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications