அந்த தப்பை பண்ணியிருக்க கூடாது.. மன்னிச்சுடுங்க! வேதனையோடு வீடியோ வெளியிட்ட பிரகாஷ்ராஜ்! என்னாச்சு?
ஹைதராபாத்: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட அப்ளிகேஷன்களுக்கு விளம்பரம் செய்ததாக பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 19 பேர் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது திரை உலகில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விளம்பரம் செய்தது தவறு என்பதை தான் உணர்ந்து விட்டதாகவும், சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது என வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்திருக்கிறார் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ்.
இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பிரபல நிறுவனங்கள் ஆன்லைன் கேமிங் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா காலத்தில் ஆன்லைன் ரம்மி பயனர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

ஆரம்பத்தில் ஜெயிப்பது போல இருந்தாலும் பின்பு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதை அடுத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. சில மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு தடையும் இருக்கிறது.
இந்த நிலையில் முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது. ஆன்லைன் ரம்மி ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

இதே நிலைதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவுகிறது. இந்த நிலையில் சமூக ஊடகங்களில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம் செய்ததாக பிரபல நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரணிதா, நிதி அகர்வால், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் மீது ஹைதராபாத் காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. சமூக வலைதளங்களில் திடீரென தோன்றும் தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் திரைப்பட நடிகர்கள் தோன்றி ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிங்கள் என கூறுவதாகவும் மக்களை தவறாக வழிநடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என பிரகாஷ்ராஜ், பிரணிதா, நிதி அகர்வால் , லட்சுமி மஞ்சு, ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக ஹைதராபாத் காவல்துறை கூறியிருந்தது. இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
My response 🙏🏿🙏🏿🙏🏿 #SayNoToBettingAps #justasking pic.twitter.com/TErKkUb6ls
— Prakash Raj (@prakashraaj) March 20, 2025
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட அப்ளிகேஷன்களுக்கு விளம்பரம் செய்தது தவறு என தான் உணர்ந்து விட்டேன் என வீடியோவில் வருத்தம் தெரிவித்திருக்கிறார் பிரகாஷ் ராஜ். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்," கடந்த 2016 ஆம் ஆண்டு ஆன்லைன் கேமிங் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தேன். ஆனால் அது தவறு என்பதை பின்னர் தான் உணர்ந்தேன். ஒரு வருடம் அந்த விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கு பிறகு ஒரு வருடம் கழித்து அதே விளம்பரத்தில் என்னை நடிக்க கேட்டார்கள். ஆனால் நான் நடிக்க முடியாது என மறுத்துவிட்டேன். அதற்கு பிறகு ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நான் நடிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டில் அந்த விளம்பரம் மீண்டும் பயன்படுத்தப்பட்ட போது அந்த நிறுவனத்திற்கு நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தேன். இளைஞர்களுக்கு நான் ஒரே ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். கேமிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்" என கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications