தெலுங்கானாவில் பண மோசடி.. ராஜஸ்தான் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிரடி கைது!
ஹைதராபாத்: தெலுங்கானாவில் வர்த்தகர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் திபேஸ் சோனி ஹைதராபாத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி தொடங்குகிறது. தெலுங்கானாவில் நவம்பர் 30-ந் தேதியும் ராஜஸ்தானில் நவமபர் 25-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கான்பூர் சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிடுபவர் திபேஷ் ஷோனி. தங்க விற்பனை வியாபாரியான இவர் தெலுங்கானாவுக்கும் அடிக்கடி சென்று வந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் தங்கம், வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபட்ட சிலரிடம் திபேஷ் சோனி பண மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். திபேஷ் சோனி மீது மொத்தம் 3 வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இந்த நிலையில் ஹைதராபாத்துக்கு மீண்டும் வந்த திபேஷ் சோனியை தொடர்பு கொள்ள முடியவில்லை என ராஜஸ்தான் போலீசில் அவரது தந்தை புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராஜஸ்தான் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில்தான் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் போலீஸ் கஸ்டடியில் திபேஷ் சோனி சிக்கி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் போலீசாரிடம் திபேஷ் சோனியிடம் மோசடி வழக்குகளை தெலுங்கானா போலீஸ் விவரித்து விவரங்களைக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக ஆகியவை களத்தில் உள்ளன. இதில் பிஆர்எஸ், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தானில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மியும் களம் காண்கிறது.












Click it and Unblock the Notifications