அடடா காங்கிரஸா இது! தெலுங்கானா வேட்பாளர்களை தேர்வு செய்ய ‘தொகுதி’ தோறும் டெல்லி மேலிட குழு ஆய்வு!
ஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அடுத்த சில வாரங்களிலேயே அறிவித்துவிடும் பணிகளில் காங்கிரஸ் படுதீவிரமாக களமிறங்கி இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்கள் குழு தெலுங்கானாவில் முகாமிட்டு தொகுதிகளுக்கு நேரில் சென்றும் ஆய்வு நடத்தி வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தெலுங்கானா சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் மாதம் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் ஆளும் பிஆர் எஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ், பாஜக மும்முரமாக உள்ளன.

பாஜக வியூகம்: தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தொடர்பாக டெல்லியில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தில் 5 மாநிலங்களுக்கான தேர்தல் வியூகம் வகுக்கப்பட உள்ளது.
ஹைதரபாத்தில் காங்கிரஸ் மேலிட குழு: இதேபோல தெலுங்கானா தேர்தல் களத்தில் காங்கிரஸும் தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிட குழு ஒன்று ஹைதராபாத் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.முரளிதரன் எம்பி, மகாராஷ்டிரா முன்னாள் எம்.எல்.ஏ. பாபா சித்திக், குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் அடங்கிய குழு திங்கள்கிழமை முதல் ஹைதராபாத்தில் முகாமிட்டு வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
ஆகஸ்ட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்: தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களில் முதல் கட்ட பட்டியலை ஆகஸ்ட் இறுதிக்குள் வெளியிட காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாம். முதல் கட்டமாக 40 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட இருக்கின்றனராம். இந்த 40 வேட்பாளர்களையும் எந்த ஒரு அதிருப்தி இல்லாமல் தேர்வு செய்து அறிவித்து களப்பணிகளை உடனே தொடங்குவதுதான் காங்கிரஸின் திட்டம் என்கின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.
ஹைதராபாத் ஆலோசனை: தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா சட்டசபை காங்கிரஸ் தலைவர் மல்லு பாட்டி விக்ரமார்கா, காங்கிரஸ் கமிட்டியின் தெலுங்கானா மாநில மேலிடப் பொறுப்பாளர் மாணிக்கம் மாணிக்கராவ் தாக்ரே, லோக்சபா எம்பி உத்தம்குமார் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களை முரளிதரன் குழு சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது.
தொகுதிகளிலும் கள ஆய்வு: பொதுவாக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் டெல்லியில் இருந்துதான் அறிவிக்கப்படுவர். ஆனால் அண்மைக்காலமாக களநிலவரங்களை அறிந்து வேட்பாளர்களை தேர்வு செய்கிற யுக்தியை காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது. அத்துடன் சில முக்கியமான தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மேலிட குழு நேரில் சென்று ஆய்வு நடத்த இருக்கிறது. அத்தொகுதிகளில் உத்தேசிக்கப்பட்ட வேட்பாளருக்கான செல்வாக்கு, காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு ஆகியவை குறித்தும் மேலிட குழு நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறதாம். இதனால் தெலுங்கானா காங்கிரஸில் பெரும் உற்சாகம் கரைபுரண்டோடுகிறது என்கின்றன ஊடக செய்திகள்.












Click it and Unblock the Notifications