தெலுங்கானா: பாஜக தலைவர் யாத்திரையால் பெரும் வன்முறை- டி.ஆர்.எஸ். தொண்டர்கள் ஆவேச தாக்குதல்
ஹைதராபாத்: தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் நடத்தி வரும் மாநில அரசுக்கு எதிரான யாத்திரையில் பெரும் வன்முறை வெடித்தது. பாஜகவினரை தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ். தொண்டர்கள் சரமாரியாகத் தாக்கினர்.
Recommended Video
தெலுங்கானா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் ஆளும் டி.ஆர்.எஸ். கட்சிக்கு எதிரான சக்திகளே அங்கு இல்லை.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இல்லை. அதனால் தெலுங்கானாவில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க பாஜக படுதீவிரமாக முயற்சித்து வருகிறது.
இதற்காக தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் ஏற்கனவே 2 கட்டமாக பிரஜா சங்க்ராம யாத்திரை நடத்தினார். தற்போது 3-வது கட்டமாக இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; ஊழல் மலிந்த அரசாக மாறிவிட்டது என்கிற குற்றச்சாட்டுகளை பாஜக இந்த யாத்திரையில் முன்வைத்து வருகிறது.
இது ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்களை கடுமையாக கொந்தளிக்க வைத்துள்ளது. இன்று ஜனகோன் என்ற இடத்தில் பாஜகவின் யாத்திரை நடைபெற்றது. இப்பேரணிக்கு டி.ஆர்.எஸ். கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு ஒரு கட்டத்தில் பெரும் மோதலாக வெடித்தது. இரு கட்சிகளின் தொண்டர்களும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இத்தாக்குதலைக் கண்டித்தும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். ஆனாலும் டிஆர்எஸ் தொண்டர்கள், பாஜகவை விரட்டி விரட்டி அடித்தனர்.
இம்மோதலில் இரு கட்சித் தொண்டர்களும் படுகாயமடைந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தெலுங்கானாவில் பாஜகவின் யாத்திரை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications