8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமாக காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சுமார் 8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பாலம் பலத்த காற்றை கூட தாங்க முடியாமல் இடிந்து விழுந்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நமது நாட்டில் அரசு கட்டுமான பணிகள் தாமதமாவது தொடர்கதையாகவே இருக்கிறது. மேலும், ஒப்பந்ததாரர்கள் நல்ல தரத்துடன் கட்டுமான பணிகளை மேற்கொள்வதில்லை என்ற புகாரும் இருக்கிறது.

இதனால் சில நேரங்களில் மோசமான விபத்துகளும் நடந்துள்ளன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நமது அண்டை மாநிலமான தெலுங்கானாவில் நடந்துள்ளது.
விபத்து: தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இரவு 9.45 மணியளவில் அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியுள்ளது. காற்றின் வேகத்தை கூட தாங்க முடியாமல், அந்த பாலத்தின் ஒரு பகுதி கீழே விழுந்துள்ளது. சுமார் 100 அடி இடைவெளியில் உள்ள தூண்களுக்கு நடுவே இருந்த இரண்டு கான்கிரீட் பகுதிகள் அப்படியே சரிந்தன. மற்ற 3 கான்கிரீட் பகுதிகள் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றன.. அவையும் விரைவில் இடிந்து விழ வாய்ப்புள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.
இந்த விபத்து தொடர்பாக உள்ளூர் மக்கள் கூறுகையில், "பாலம் இடிந்து விழும் முன்பு தான், திருமண விழாவுக்கு சென்ற 65 பேர் கொண்ட பேருந்து இப்பகுதியை கடந்து சென்றது. அந்த பேருந்து சென்ற அடுத்த நிமிடம் இந்த மோசமான விபத்து அரங்கேறிவிட்டது. ஒரு நிமிடம் முன்னாள் இந்த விபத்து நடந்திருந்தால் கூட அந்த திருமண பேருந்து விபத்தில் சிக்கி இருக்கும்" என்றார்.
8 ஆண்டுகளாக கட்டுமானம்: மனைர் ஆற்றின் குறுக்கே சுமார் ஒரு கிமீ தொலைவிற்கு கட்டப்படும் இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதைய தெலுங்கானா சபாநாயகராக இருந்த மதுசூதனா சாரி மற்றும் அப்பகுதியை எம்எல்ஏ புட்டா மது ஆகியோர் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். இந்த கட்டுமான பணிகளுக்கு சுமார் ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த பாலத்தின் கட்டுமான பணிகளை ஓராண்டில் முடிக்க வேண்டும் என்பதே திட்டமாகும். இதன் மூலம் அங்குள்ள மாந்தனி, பரக்கல் மற்றும் ஜம்மிகுண்டா ஆகிய மூன்று நகரங்களுக்கு இடையேயான பயண தூரம் சுமார் 50 கிமீ வரை குறையும். பூபால்பள்ளியில் உள்ள கர்மில்லபல்லு என்ற பகுதியை பெத்தபள்ளியில் உள்ள ஒடேடேடு என்ற பகுதியுடன் இணைக்கும் வகையில் இந்தப் பாலம் திட்டமிடப்பட்டது.
கமிஷன்: இந்த பாலத்தின் கட்டுமானம் தொடங்கி முதல் சில மாதங்கள் வேகமாகவே கட்டுமானம் நடந்துள்ளது. இருப்பினும், ஒப்பந்தம் எடுத்தவரிடம் கமிஷன் கேட்டு உள்ளூர் அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்ததால் அவர் ஓரிரு ஆண்டுகளில் கட்டுமான பணியை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். மேலும் அந்த ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை கூட அரசு தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஒப்பந்ததாரர் யார்: கடந்த 2021இல் தெலுங்கானாவின் வெமுலவாடா என்ற பகுதியில் கனமழை பெய்த நிலையில், அங்கிருந்த பாலம் மழையை கூட தாங்க முடியாமல் அப்படியே அடித்துச் செல்லப்பட்டது. அந்த பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரரே இதையும் கட்டி வந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். இந்த பாலமும் கூட மிகவும் பலவீனமாகவே இருந்ததாகவும் கூறுகிறார்கள்.
கிராம மக்கள்: பாலத்தின் கட்டுமானம் பாதியில் நிறுத்தப்பட்டதால் வேறு வழியில்லாமல் கடந்த 5 ஆண்டுகளாக பாலத்தின் கீழ் மண் சாலை அமைத்து கிராம மக்கள் அதை பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆனதால் இத்திட்டத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டதாக கூறும் உள்ளூர் மக்கள், இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் 60% கட்டுமான பணிகள் கூட நிறைவடையவில்லை என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications