தெலுங்கானா பதுகம்மா விழா.. ராஜ்பவனில் உற்சாகமாக கொண்டாடிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பாரம்பரிய விழாவான பதுக்கம்மா விழா தெலுங்கானா ராஜ்பவனில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா ராஜ்பவனில் பணியாற்றும் பெண்களுடன் இணைந்து பதுக்கம்மா விழாவை கொண்டாடினார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
தெலுங்கானா மாநிலத்தில் நவராத்திரி பண்டிகை 'பதுகம்மா பண்டிகை' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் உற்சாகமாக மலர்களை அலங்கரித்து கொண்டாடுகின்றனர்.
தெலுங்கானாவில் ஆளுநராக பதவி வகிக்கும் தமிழிசை சவுந்தரராஜன் ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதுகம்மா விழாவை உற்சாகமாக கொண்டாடினார். உள்ளூர் மக்கள் கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் பதுகம்மா விழாவை பாரம்பரியமான முறையில் மலர்களால் அலங்கரித்து கொண்டாடினர்.
5 ஆண்டுகள் தடை- பிஎப்ஐ ஆபத்தான இயக்கம்..4 மாதங்களுக்கு முன்பு எச்சரித்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி !

நவராத்திரி பண்டிகை
நாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். பாடல்களைப் பாடி சுண்டல் படைத்து அம்மனை அழைக்கின்றனர். ஆடல் பாடல்கள் களைகட்டும். மகாராஷ்டிராவில் நவராத்திரி பண்டிகை சமயத்தில் புதிய சொத்துக்களை வாங்குவார்கள. திருமணமான பெண்களை வீட்டிற்கு அழைத்து ஆசி வழங்குவதோடு பரிசுகளை கொடுத்து அனுப்புவார்கள். இரவு நேரங்களில் தாண்டியா நடனமாடுவார்கள். பஞ்சாப் மாநிலத்தில் ஒன்பது நாட்களும் விழா களைகட்டும். ஒன்பது கன்னிப்பெண்களை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து பரிசுகளை கொடுப்பார்கள்.

துர்கா பூஜை
நாட்டின் சில பகுதிகளில் துர்காபூஜையாக கொண்டாடுகின்றனர். மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த துர்க்கையை கொண்டாடுகின்றனர். உயரமான துர்கா சிலைகளை வைத்து வழிபட்டு பின்னர் கங்கையில் கரைக்கின்றனர். அசுரனை வதம் செய்து விட்டு அன்னை இமயமலைக்கு திரும்பி செல்வதாக ஐதீகம். மேற்கு வங்காளம், ஒடிசா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் துர்கா பூஜை பிரசித்தம். அதே போல ஹிமாசலபிரதேசத்ல் குல்லு துஸ்ரா என்று கொண்டுகின்றனர். ராமர் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாளே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

தெலுங்கானா பதுகம்மா
தெலுங்கானாவில் பதுகம்மா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் பாரம்பரியமான உள்ளூர் பூக்களை கொண்டு மலர் பதாகைகளை தினமும் பூஜைக்கு செய்து வழிபடுவர் நவராத்திரியின் கடைசி நாளன்று அனைத்து மலர் பதாகைகளையும் ஒன்றாக ஆற்றிலோ, கடலிலோ கொண்டு சென்று விட்டுவிடுவார்கள்.

பதுகம்மா பண்டிகை
தெலுங்கானாவில் பித்ருபட்சம் அமாவாசை தொடங்கி துர்காஷ்டமி வரை கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் சதுலா பதுகம்பா, பெட்ட பதுகம்மா என்று கொண்டாடுகின்றனர். மலர்களை அழகாக அலங்கரித்து காவல் தெய்வமான மகா கவுரியை வழிபடுகின்றனர்.

மலர் கோபுரம்
பதுகம்மா என்பது அழகிய மலர்க் குவியல் ஆகும். இது மருத்துவ குணங்கள் கொண்ட பல்வேறு வகையான மலர்களால் கோபுர வடிவில் ஏழு அடுக்குகளாக அமைக்கப்படுகிறது. ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து, அதை சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி அலங்கரிப்பர். பின்னர் அதை பொது இடத்தில் வைத்து பெண்கள் கும்மியடித்து பாடல் பாடுவர். கும்மியடித்தும் கோலாட்டம் ஆடியும் பெண்கள் இதனை கொண்டாடுவர்.

அம்மனுக்கு அழைப்பு
அழகாக மலர்களை அடுக்கி வைத்து அம்மனே வருக என்று அழைக்கின்றனர். இந்த விழாவின் போது பெண்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு நகைகளை அணிந்து கொண்டு உற்சாகமாக கொண்டாடுகின்றனர். தெலுங்கானாவில் இந்த பண்டிகை மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது பிறந்த வீட்டிற்கு வரும் பெண்களுக்கான பண்டிகை என கூறப்படுகிறது.

ராஜ்பவனில் பதுகம்மா
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனது ஆளுநர் மாளிகையில் மலர்குவியல்களை அலங்கரித்து பெண்களுடன் அம்மனை வணங்கினார். பதுகம்மா விழாவை முன்னிட்டு ராஜ்பவனில் பணிபுரியும் பெண்களுக்கு புடவைகளையும் பரிசளித்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.