பணத்தை வாங்கிட்டு ஓட்டுப் போடாத மக்கள்.. வீட்டிற்கே போய் பணத்தை திரும்ப வசூலித்த பாஜக வேட்பாளர்
ஹைதராபாத்: தேர்தல் என வந்துவிட்டாலே பல வினோத மற்றும் சுவாரசியச் சம்பவங்கள் நடக்கும். இப்படிக் கூட நடக்குமா என்று நாம் எதிர்பார்க்காத பல காமெடிகளும் கூட தேர்தல் காலங்களில் நடக்கவே செய்யும். அப்படியொரு வினோதச் சம்பவம் தான் தெலுங்கானாவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தெலங்கானாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சித் தேர்தலில் பல அரசியல் திருப்பங்கள் அரங்கேறின. தேர்தல் தொடர்பாக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல வீடியோக்கள் இணையத்தில் பரவின. தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் பரவின.

அப்படியொரு வினோதமான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அதாவது தேர்தலில் வாக்காளருக்குப் பணம் கொடுத்த வேட்பாளர் ஒருவர், தான் தோற்ற பிறகு தனக்கு வாக்களிக்காதவர்களிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பாஜக வேட்பாளர்
தெலுங்கானாவின் மன்செரியல் மாநகராட்சியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு 9வது வார்டில் பாஜக சார்பில் ஜாடி திருப்பதி என்பவர் போட்டியிட்டுள்ளார். அங்குத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போதும் இருவரும் மாறி மாறி முன்னிலைக்கு வந்துள்ளனர். இறுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் 16 வாக்குகளில் ஜாடி திருப்பதி தோல்வியடைந்தார்.
இதனால் ஜாடி திருப்பதி வேதனை அடைந்தார். அவர் தேர்தலுக்கு முன்பு வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. கை நீட்டி பணத்தை வாங்கிவிட்டு தனக்கு வாக்களிக்கவில்லை என்று ஓவர் பீலிங்கில் போய் உள்ளார். இதற்கு அவரது மனைவியும் சப்போர்ட்டிற்கு வந்துள்ளார்.
பணத்தைத் திரும்பப் பெற்ற நபர்
ஜாடி திருப்பதியின் மனைவி ரூபா, ஒவ்வொரு வீடாக நேரடியாகச் சென்றுள்ளார். தனது கணவருக்குத் தான் வாக்களித்தார்களா எனக் கேட்டுள்ளார். ஆம், உங்க கணவருக்குத் தான் வாக்களித்தோம் என அப்பகுதி மக்கள் சொல்லியுள்ளனர். இருப்பினும் அதை நம்பாத ரூபா, 'கடவுள் மீது சத்தியம் செய்யுங்கள். எனது கணவருக்குத் தான் வாக்களித்தேன் எனச் சத்தியம் செய்து சொல்லுங்கள்.. இல்லை என்றால் பணத்தைத் திரும்பக் கொடுங்கள்' எனக் கூறியிருக்கிறார். ஒரு வாக்கிற்கு அவர்கள் ₹3,000 கொடுத்துள்ளார். இதை ரூபா திரும்பப் பெறும் வீடியோ இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ரூ.3000
அந்த வீடியோவில் ஒரு வயதான பெண்மணியிடம் ரூபா இதைக் கேட்கிறார். அந்தப் பெண் கடவுள் மீது சத்தியம் செய்யச் சொன்னவுடன் தான் திருப்பதிக்கு வாக்களிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். மேலும், ரூபா கேட்டதால் ₹3,000-ஐ திரும்பக் கொடுக்கிறார். மேலும், திருப்பதிக்கு வாக்களித்து இருந்தால் இந்தப் பணத்தைத் திரும்ப தந்திருக்க மாட்டேன் என அந்த வயதான பெண் சொல்வதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
நடவடிக்கை தேவை
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்ற இழிவான நடைமுறைகள் எந்தளவுக்குச் சாதாரணமாகிவிட்டது மற்றும் அப்பட்டமாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. வாக்கிற்குப் பணம் வாங்கக் கூடாது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரவே செய்கிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.
இந்தியாவில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் அல்லது வெகுமதி கொடுப்பது, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act, 1951) பிரிவு 123(1)-ன் கீழ் குற்றமாகும். மேலும், இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 171B-ன் கீழும் இது தண்டனைக்குரிய குற்றமாகும்!












Click it and Unblock the Notifications