மோகன்தாஸ் பை சவாலுக்கு ரெடி.. களத்திற்கு வந்த தெலுங்கானா முதல்வர் கேசிஆர் மகன் கே.டி.ராமாராவ்
ஹைதராபாத்: தெலங்கானாவில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து பெரும் விவாதங்கள் மேலெழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை அடுத்த 18 மாதங்களில் சரி செய்து காட்டுவோம் என அம்மாநில அமைச்சரும் முதலமைச்சரின் மகனுமான கே.டி.ராமா ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்னையை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பை வலியுறுத்தி இருந்த நிலையில் இந்த சவாலை ஏற்கொள்வதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.
மேலும் அடுத்த 18 மாதங்களில் தெலங்கானாவை பாஜக ஆளும் குஜராத், கர்நாடகா மாநிலங்களை விட முன்னேற்றி காட்டுவதாகவும் அமைச்சர் கேடிஆர் தெரிவித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு
ஊட்டச்சத்து குறைபாடு பல மாநிலங்களில் தொடர்ந்து இன்னமும் நீடித்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானாவில் நிலவி வரும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன்தாஸ் பை, அம்மாநில அமைச்சர் கேடிஆர்-க்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அதில் நீங்கள் இந்த மாநிலத்தை நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறீர்கள் என்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த தரவுகளை வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் செய்தது என்ன என காட்டுங்கள் என்றும் டிவிட் செய்திருந்தார்.

சாவால்
இந்நிலையில் இந்த சாவாலை ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் கூறியுள்ளார். அவர் தனது பதில் டிவிட்டில், "அடுத்த 18 மாதங்களில், எனது மாநிலத்தின் ஊட்டச்சத்து குறைபாடு புள்ளிவிவரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். கர்நாடகாவில் 40% கமிஷன் அரசு மற்றும் குஜராத்தில் பாலியல் வன்கொடுமைக்கு நிவாரணம் வழங்கிய அரசு ஆகிய இரண்டையும் மிஞ்சுவோம்" என்று கூறியுள்ளார். இந்த சண்டை பிரதமரின் மனதின் குரல் (மன்கி பாத்) நிகழ்ச்சியிலிருந்து தொடங்கியுள்ளது.

பின்னணி
அதாவது, கடந்த செவ்வாய்க்கிழமை தனது 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்காக தாதியா மாவட்டத்தில் 2019 இல் தொடங்கப்பட்ட 'மேரா பச்சா அபியான்' திட்டத்தை பிரதமர் மோடி பாராட்டினார். இது குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு திட்டமாகும். குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உணவுகளுடன், 'பஜன்கள்-கீர்த்தனைகள்' இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பஜனைகள்
இங்கிருந்துதான் பிரச்னை தொடங்கியது. தெலங்கானா அமைச்சரும், அம்மாநில முதலமைச்சரின் மகனுமான கே.டி. ராமா ராவ், இதை குறிப்பிட்டு ஊட்டச்சத்து குறைப்பாட்டை ஒழிக்க பஜனைகளா? என விமர்சித்திருந்தார். இதனையடுத்துதான் மேற்குறிப்பிட்ட கருத்துகளை இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஊட்டச்சத்து குறைபாட்டில் தெலங்கானா மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட, அதிக எடை, வளர்ச்சி குன்றிய மற்றும் உடல் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை இம்மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே இந்த நிலை மாற வேண்டும் என்பதை அனைவரின் விருப்பமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications