அடுத்த பிரச்னை ஆரம்பம்.. கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி.. செக் வைக்கும் தெலங்கானா அரசு
ஹைதராபாத்: பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி திரைப்படத்தை தெலங்கனா மாநிலத்தில் வெளியிடத் தடை செய்வது குறித்து அம்மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறிவரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
பாஜக எம்.பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி சிக்கி வருகிறார். இவர் எது பேசினாலும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். சமீபத்தில் காங்கிரஸ் ராகுல் காந்தி குறித்து தவறாக சித்தரித்து படத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். பாலிவுட்டில் யாருக்கும் மூளையே இல்லை. அவர்களுடன் நான் பழகுவதே இல்லை என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார் கங்கனா. ஏற்கெனவே இவர் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசிய வழக்கில் சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் பெண் ஊழியர் பளார் என்று அறை விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க பிரதமர் மோடி தலைமையில் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இல்லையென்றால் பஞ்சாப் மாநிலத்தை வங்கதேசமாக மாற்றி இருப்பார்கள். பஞ்சாப்பில் நடைபெற்ற அதே சூழ்நிலை இங்கும் நடந்திருக்கும். வெளிநாட்டில் இருந்து இதற்கான சதித்திட்டம் நடந்தன. நாடு யாரின் கைகளில் சென்றாலும் அதைப்பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை.
விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடந்த குற்றங்கள் குறித்து இந்த நாடு அறியாது. படுகொலை செய்து தூக்கிலிடப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது." என்று கூறியிருந்தார். இதனை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவினரை அவரைக் கண்டிக்க தொடங்கினர். பஞ்சாப் மாநில பாஜக மூத்தத் தலைவர் ஹர்ஜித் கரேவல் கஞ்னாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
மதம், விவசாயிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் கங்கனா கருத்து சொல்லாமல் இருப்பது ரொம்பவே நல்லது என்று கூறியிருந்தார். மேலும், கங்கனாவுக்கு பாஜக சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை, அதற்கான அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இனி என்னுடைய வார்த்தைகளில் கவனமாக இருப்பேன். கட்சித் தலைமை என்னை கண்டித்தது என்று கங்கனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கங்கனா ரனாவத்துக்கு புதுப் பிரச்னை உருவாகியுள்ளது. கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகவுள்ள 'எமொ்ஜென்சி' ஹிந்தி திரைப்படத்தை தெலங்கானாவில் வெளியிடத் தடை செய்வது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாா்.
இதுகுறித்து, தெலங்கானா மாநில அரசு ஆலோசகா் முகமது அலி சபீா் கூறுகையில், "கங்கனா ரனாவத்தின் படத்தை மாநிலத்தில் தடை செய்ய வேண்டும் என்று சீக்கிய அமைப்பினா் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வா் ரேவந்த் ரெட்டியும் வாக்குறுதி அளித்துள்ளாா்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எமர்ஜென்சி படத்தில் சீக்கியா்களை அவமதிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சீக்கிய அமைப்பினா் தடை விதிக்கக் கோரியுள்ளனா். விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா சா்ச்சைக்குரிய கருத்து கூறியுள்ள நிலையில், அந்தப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சீக்கிய விவசாயிகளும் அவர் மீது அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எமர்ஜென்சி திரைப்படம் செப்டம்பர் 6 இல் வெளியாக இருந்த நிலையில், இப்படத்துக்கு தணிக்கைக் குழு அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்று கங்கனா ரணாவத் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.












Click it and Unblock the Notifications