இனி லஞ்சுக்கு ஹைதராபாத் போயே பிரியாணி சாப்பிடலாம் சென்னை கைஸ்! புல்லட் ரயிலுக்கு தெலங்கானா சிஎம் ஓகே
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் ரயில்வே வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்றவாறு புதிய ரயில்வே திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம், ஹைதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு ஒரு புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஆசை தெரிவித்திருப்பதுதான்!
ஹைதராபாத், சென்னை ஆகிய இரு பெரும் மாநகரங்களையும் இணைக்கும் இந்த அதிவேக ரயில் திட்டம் குறித்து, அதிகாரப்பூர்வமாகப் பரிசீலிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இது ஒருவேளை நிஜமானால், இரு மாநிலங்களுக்கும் இடையிலான பயண நேரம் வெகுவாகக் குறையும். தமிழக மக்களும், தெலங்கானா மக்களும் இனி சில மணிநேரங்களிலேயே புல்லட் ரயிலில் பயணம் செய்யலாம்.

மற்ற திட்டங்கள் என்னென்ன?
இத்துடன், மேலும் பல அதிரடி திட்டங்களையும் அவர் முன்வைத்தார்:
- பாரத் ஃபியூச்சர் சிட்டி: ஹைதராபாத்தில் அமையவுள்ள 'பாரத் ஃபியூச்சர் சிட்டி'யிலிருந்து ஆந்திராவின் தலைநகரமான அமராவதி வழியாக, மசூலிப்பட்டினம் துறைமுகத்திற்குச் செல்லும் பசுமைவழி நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் ஒரு புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.
- பிராந்திய வட்ட ரயில் (Regional Ring Rail): ஹைதராபாத்தைச் சுற்றி அமையவுள்ள பிராந்திய வட்டச் சாலையுடன் (RRR) இணையும் வகையில், பிராந்திய வட்ட ரயில் சேவைக்கான திட்டங்களையும் தயாரிக்க வேண்டும்.
தெலங்கானாவை எதிர்காலத்தில் தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்மாதிரியாக மாற்றும் முயற்சியில், ரேவந்த் ரெட்டியின் இந்தப் புதிய ரயில்வே திட்டங்கள் முக்கியமான படிகளாகக் கருதப்படுகின்றன. சாதகமான சூழ்நிலை அமைந்தால், சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம் தென்னிந்தியாவின் ரயில்வே வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!
இந்தியாவில் அதிவேக ரயில் சேவைக்கான கனவு, படிப்படியாக நிஜமாகி வருகிறது. நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், பல புல்லட் ரயில் திட்டங்கள் தற்போது தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், சில திட்டங்கள் கட்டுமான நிலையில் உள்ளன, மற்றவை திட்டமிடல் மற்றும் ஆய்வில் இருக்கின்றன. இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமானத்தில் உள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில்:
- மும்பை - அகமதாபாத்: இது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாகும். 508 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடத்தில், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகம் முதல் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி வரை மொத்தம் 12 முக்கிய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. ஜப்பான் நாட்டின் ஷிங்கான்சென் (Shinkansen) தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் இந்தத் திட்டம், 2028-ஆம் ஆண்டுக்குள் முழுமையடைந்து சேவைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிடலில் உள்ள சில முக்கிய புல்லட் ரயில் பாதைகள்:
- தென்னிந்தியாவின் 4 நகரங்கள்: தென்னிந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களான சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் அமராவதி ஆகியவற்றை இணைக்கும் ஒரு பிரம்மாண்டமான புல்லட் ரயில் வழித்தடம் விரைவில் துவங்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தென் இந்தியாவின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஒரு பெரும் உந்துதலாக அமையும்.
- மும்பை - நாக்பூர்: மகாராஷ்டிராவின் இரு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 736 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது.
- ஹைதராபாத் - பெங்களூர்: 618 கி.மீ. நீளம் கொண்ட புதிய புல்லட் ரயில் திட்டம் தற்போது ஆலோசனையில் உள்ளது.
- நாக்பூர் - வாரணாசி: 855 கி.மீ. நீளமுள்ள இந்த பாதை, மத்திய மற்றும் வட இந்தியாவின் முக்கியப் பகுதிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தும்.
- பாட்னா - கவுகாத்தி: வடகிழக்கு இந்தியாவை நாட்டின் மையப்பகுதியுடன் இணைக்கும் வகையில், 850 கி.மீ. நீளமுள்ள இந்த வழித்தடம், ஏழு மாநிலங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
- டெல்லி: டெல்லியை மையமாகக் கொண்டு வாரணாசி, அமிர்தசரஸ், மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் பல புதிய புல்லட் ரயில் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதோடு, பயண நேரத்தைக் குறைத்து, வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications