தமிழ்நாட்டில் விஜய்.. தெலங்கானாவில் விஜய் தேவரகொண்டா! உற்று பார்க்கும் தெலுங்கு மக்கள்! என்ன மேட்டர்
ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது மனைவி ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கிடையே விஜய் ஸ்டைலில் விஜய் தேவரகொண்டாவும் ஒரு செயலை செய்திருக்கிறார். அது இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு விஜய், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து, அவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கி கௌரவிப்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விஜய்யின் இந்தச் செயல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது அதே பாணியில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் தேவரகொண்டாவும் தனது சொந்த ஊர் மாணவர்களுக்காகக் களமிறங்கியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை இங்கே காண்போம்.
விஜய் - ராஷ்மிகா
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து, தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள அச்சம்பேட்டை பகுதிக்குச் சென்றனர். அங்குள்ள அரசுப் பள்ளிகளில் படித்து, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு 'தேவரகொண்டா அறக்கட்டளை' சார்பாகக் கல்வி உதவித்தொகைகளை வழங்கினர்.
அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 180 தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. போதிய வசதிகள் இல்லாத சூழலிலும், நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களைக் கண்டறிந்து இந்த அறக்கட்டளை கௌரவித்துள்ளது.
உதவித் தொகை
அச்சம்பேட்டை என்பது விஜய் தேவரகொண்டாவின் தந்தையின் சொந்த ஊர் ஆகும். தனது தந்தை வளர்ந்த மண்ணில் உள்ள மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் அங்கு சென்றுள்ளார். இது குறித்துப் பேசிய விஜய் தேவரகொண்டா, "எனது சொந்த ஊரான அச்சம்பேட்டை மாணவர்களின் வாழ்க்கையில் நானும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். இந்த மண்ணோடு எனக்கு ஒரு பிணைப்பு உள்ளது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ரசிகர்களால் அன்போடு 'விரோஷ்' என்று அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, திரையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் சமூக அக்கறையுடன் செயல்படுவதாகப் பாராட்டுகள் குவிகின்றன. இந்த ஜோடி திருமணத்தின் போதே கல்வி உதவித்தொகை குறித்து அறிவித்திருந்தனர். அதன்படியே தற்போது நேரில் சென்று மாணவர்களைச் சந்தித்து பரிசுத் தொகையை வழங்கியுள்ளனர்.
தெலுங்கானா முழுக்க!
அதேநேரம் விஜய் தேவரகொண்டா இதோடு நிறுத்தப்போவதில்லையாம். முதலில் அச்சம்பேட்டை மண்டலத்தில் தொடங்கிய இந்தத் திட்டம், அடுத்ததாக நாகர்கர்னூல் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். அதன்பிறகு, தெலங்கானா மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித்தொகை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
விஜய் ஸ்டைல்
தமிழகத்தில் சூர்யா, விஜய் உட்பட நடிகர்கள் எப்படி கல்விக்காக உதவி செய்தார்களோ.. அதேபோல தெலுங்கானாவிலும் விஜய் தேவரகொண்டா எடுத்துள்ள இந்த முயற்சி மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. "இது ஒரு சிறிய உதவிதான், ஆனால் இது மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பெரிய உந்துதலாக இருக்கும்" என்று விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications