நாயுடுவுக்கே ட்விஸ்ட்.. மோடிக்கு ஆதரவு தந்த ஜெகன்.. ஆந்திரா குறித்து மாணிக்கம் தாகூர் விமர்சனம்
ஹைதராபாத்: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இருப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விருதுநகர் எம்பியும், காங்கிரஸ் நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர், வெளியிட்ட எக்ஸ்தள பதிவில், ஆந்திரா போன்ற மாநிலங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் இருக்கும் சூழலில், மக்களுக்காகப் போராடுவதற்குப் பதிலாக மீண்டும் மோடியிடம் ஜெகன் சரணடைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் எம்பியும், காங்கிரஸ் நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களின் அதிகாரத்தைச் சிதைக்கும் ஒரு விஷயம் என்றும் தன் மீதுள்ள ஊழல் வழக்குகள் காரணமாக மத்திய அரசை எதிர்க்கத் துணிவில்லாமல், மாநிலத்தின் எதிர்காலத்தையே ஜெகன் மோகன் ரெட்டி அடகு வைக்கிறார் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது.

சர்ச்சைக்குரிய தொகுதி மறுவரையறை விவகாரத்தில், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் ஒருமுறை நரேந்திர மோடியுடன் இணங்கிப் போகத் தயாராக இருப்பது போல் தெரிகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் குரலும் எதிர்காலப் பிரதிநிதித்துவமும் ஆபத்தில் இருக்கும் நிலையில், ஜெகனின் முன்னுரிமை மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது: நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சிபிஐ வழக்குகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வது.
இந்த ஆதரவு கொள்கை சார்ந்ததா? அல்லது பிழைப்புக்கானதா? அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அரசியல் ரீதியாக இணக்கம் ஏற்படும் போதெல்லாம், இந்த வழக்குகள் எப்படி வசதியாக அமைதியாகிவிடுகின்றன என்பதை மக்கள் பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, ஆந்திரா போன்ற மாநிலங்கள் தங்களின் நியாயமான பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் இருக்கும் நிலையில், மக்களுக்காக நிற்பதை விடுத்து சரணடைவதையே ஜெகன் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது தலைமைப்பண்பு அல்ல - மாநிலத்தின் எதிர்காலத்தை விலையாகக் கொடுத்துச் செய்துகொண்ட சமரசம். ஆந்திரப் பிரதேசத்திற்குத் தேவை தன் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு தலைவர் தானே தவிர, தனது தனிப்பட்ட நிவாரணத்திற்காக அவற்றை வியாபாரம் செய்பவர் அல்ல." இவ்வாறு கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடும் சர்ச்சைக்குரிய தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். எப்படியும் நாயுடு எதிர்ப்பார் என்று எதிர்பார்த்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. பாஜக கூட்டணியில் உள்ள சூழலில், சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்திருப்பதாக நினைக்கின்றன. ஆனால் எதிர்க்கட்சிகளே எதிர்பார்க்காத ஒன்றாக, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தது தான்.
ஏற்கனவே கடந்த 2019 முதல் 2024 வரை ஐந்து ஆண்டுகளுமே ஜெகனின் கட்சி பாஜகவின் அனைத்து மசோதாக்களையும் ஆதரித்தது. அதாவது பாஜக கூட்டணியை வெளியில் இருந்து ஆதரித்தே வந்தது. 2024 தேர்தலில் தான் சந்திரபாபு நாயுடு உடன் பாஜக கூட்டணி அமைத்ததால் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது நாயுடு உடன் சேர்த்து பாஜகவையும் எதிர்த்து வருகிறார். இந்த சூழலில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஜெகன் கொடுத்த ஆதரவு எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.














Click it and Unblock the Notifications