இன்று வரும் 119 பேர்.. நாடு கடத்தும் அமெரிக்க விமானம் பஞ்சாப்பில் தரையிறங்க எதிர்ப்பு - பின்னணி
சண்டிகர்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் முதற்கட்டமாக நம் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனர். இப்போது 2வது கட்டமாக 119 இந்தியர்கள் அமெரிக்க போர் விமானத்தில் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இந்த விமானம் இன்று பஞ்சாப்பின் அமிர்தசரஸில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில் தான் அமிர்தசரஸில் அமெரிக்கா விமானம் தரையிறங்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்று உள்ளார். இதையடுத்து அந்த நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு உள்ளார். முதற்கட்டமாக இந்தியர்கள் 104 பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து அவர்கள் ராணுவ விமானத்தில் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். அவர்களின் விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது.
இதையடுத்து 2வது கட்டமாக இன்று 119 இந்தியர்கள் நாடு கடத்தி வரப்படுகின்றனர். அமெரிக்காவின் ஜி- 17 ரக போர் விமானம் மூலம் அவர்கள் இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்க உள்ளனர். இன்று இரவு 10 மணிக்கு இந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த விமானத்தில் இருக்கும் 119 இந்தியர்களில் 67 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அழைத்து வரும் அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸில் தரையிறங்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே முதல் விமானம் தரையிறங்கிய நிலையில் இன்று 2வது விமானம் தரையிறங்கும் நிலையில் அவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி பகவந்த் மான் கூறியுள்ளதாவது:
"அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்திய முதல் விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. இப்போது, இரண்டாவது விமானம் இன்று தரையிறங்கும். விமானத்தை தரையிறக்க அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணத்தை வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும். பிரதமர் மோடியும்- டிரம்பும் சந்தித்த நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் நம் மக்களைக் கட்டிப்போட்டிருக்க வேண்டும். மோடி அமெரிக்காவில் இருந்தபோது இந்தியாவுக்கு டிரம்ப் கொடுத்த பரிசு இதுதானா?
அமிர்தசரஸில் இருந்து வெறும் 40 கிலோமீட்டர் தொலைவில் தான் பாகிஸ்தானின் லாகூர் உள்ளது. எதிரி நாடான பாகிஸ்தான், அமிர்தசரஸ் அருகே உள்ளது என்று தெரிந்தும் அமெரிக்க விமானங்களை இங்கே தரையிறக்க மத்திய அரசு ஏன் முடிவு செய்தது? இது என்ன வகையான வெளியுறவுக் கொள்கை? விமானங்களை தேசிய தலைநகரில் தரையிறக்க வேண்டும்.
வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் காசியாபாத்தில் உள்ள ஹிண்டனில் தரையிறங்கியது. ஆனால் அமெரிக்கா விமானங்கள் மட்டும் ஏன் அங்கு தரையிறக்கப்படவில்லை. பஞ்சாப் மக்கள் மட்டுமே சட்டவிரோத குடியேறிகள் என்று சித்தரிக்க வேண்டுமென்றே அமிர்தசரஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
பாஜக எப்போதும் பஞ்சாபை அவதூறு செய்ய சதி செய்கிறது. அமிர்தசரஸில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. சர்வதேச விமானங்களை அமிர்தசரஸில் இருந்து இயக்குவதற்கான சூழல் இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால் இப்போது அமெரிக்காவிலிருந்து விமானங்கள் ஏன் வருகின்றன? விமானத்தை டெல்லி அல்லது அகமதாபாத்தில் தரையிறக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சீறியுள்ளார்.












Click it and Unblock the Notifications