நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 14 புதிய மசோதாக்கள் அறிமுகம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 14 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
டெல்லி: வரும் 15-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின்போது புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 15-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தது.

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் புதிதாக தாக்கல் செய்யப்படவுள்ள மசோதாக்கள் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இதில் முஸ்லிம் பெண்களை பாதிப்புக்குள்ளாக்கும் முத்தலாக் விவகாரத்தில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
அதேபோல் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு பதிலாக அவர்களின் பிரதிநிதிகளுக்கான வாக்குரிமை, தொழில்களை தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் உள்ளிட்ட 14 புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது அறிமுகம் செய்வதற்காக பட்டியலிடப்பட்ட 25 மசோதாக்களில் 9 மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
எனவே அப்போது விடுபட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, 123-ஆவது விதியில் திருத்தம் செய்யும் அரசியலமைப்பு திருத்த மசோதா, திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்கும் மசோதா உள்ளிட்டவை இந்த குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தொடர் 14 வேலைநாள்களுக்கு நடைபெறும்.












Click it and Unblock the Notifications