செம்மரக்கடத்தல் வழக்கு... லஞ்சம் வாங்கிய 2 போலீசார் கைது... ஆய்வாளர் தலைமறைவு
திருப்பதி : செம்மர கடத்தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மறைவாக உள்ள காவல் ஆய்வாளரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலம் ரேணி குண்டாவை சேர்ந்த சிவா என்பவர் திருப்பதி நகர எஸ்பி சித்தார்த் ஜெயினிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில் தான் ஏற்கனவே செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் கடத்தப்படும் செம்மரங்களை சோதனையின்றி கொண்டு செல்ல வடமலை பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர ரெட்டி மற்றும் தலைமை காவலர் குமார் மற்றும் காவலர் சின்னி பாபு ஆகியோரிடம் 5 லட்சம் ரூபாய் பணம் லஞ்சமாக கொடுத்தாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அவர்கள் மேலும் 15 லட்ச ரூபாய் கேட்பதாகவும் இல்லையெனில் குண்டர் சட்டத்தில் கைதுச் செய்வதாக மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியாக குழு அமைத்து விசாரணை நடத்த எஸ்பி சித்தார்த் ஜெயின் உத்தரவிட்டார்.
விசாரணை நடத்திய இந்த குழுவினர் நடத்திய சோதனையில் வடமலைபேட்டை காவல்நிலையத்தில் இருந்து 4 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது.
மேலும் 3 பேரும் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தலைமை காவலர் குமார் மற்றும் காவலர் சின்னி பாபு ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள காவல் ஆய்வாளரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications