சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்- நெரிசலில் சிக்கி 35 பக்தர்கள் படுகாயம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர், அதில் இரண்டு பக்தர்கள் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபரிமலை: பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத மண்டல பூஜைக்காலம் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. மண்டல பூஜை நாளை நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை காலம் திங்கள்கிழமை நிறைவடைந்த உடன் அன்றிரவு நடை அடைக்கப்படும். பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், வாராந்திர விடுமுறை தினமாகவும் இருப்பதால் வெள்ளிக்கிழமை இரவு முதலே பக்தர்கள் வருகை அதிகரித்தது.

பதினெட்டாம்படி ஏறுவதற்கு பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் நூறு, நூறு பேராக 18 படி ஏற அனுமதிக்கப்பட்டனர்.
சனிக்கிழமை பகல் 1.30க்கு சன்னிதானத்தில் களபாபிஷேகம், உச்சி பூஜை முடித்து மதியம் 2.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. மீண்டும் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
டிசம்பர் 22ல் புறப்பட்ட தங்க அங்கி ரதம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பம்பை வந்தடையும். அங்கு கணபதி கோயில் வளாகத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு தங்கஅங்கிவைக்கப்படும். பின்னர், பெட்டகத்தில் அடைக்கப்பட்டு சன்னிதானம் கொண்டுசெல்லப்பட்டு மாலையில் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். திங்கள்கிழமை இரவு நடை அடைக்கப்பட உள்ளது.
மண்டல பூஜை நிறைவடைய உள்ளதால் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இன்று மாலை சபரிமலையில் மாளிகாபுரம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 பக்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களில் 90 சதவிகிதம் பேர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
காயமடைந்த பக்தர்கள் பம்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பக்தர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் ஒருவர் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு மகரவிளக்கு பூஜையின் போது புல்மேடு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 104 பேர் உயிரிழந்தனர், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications