அப்படியே கவிழ்ந்த லாரி.. எட்டிப் பார்த்தால் ஷாக்! எண்ணிப் பார்த்தால் 7 கோடிப்பே.. அலறிய ஆந்திரா!
அமராவதி: ஆந்திராவில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே கட்டு கட்டான பணத்துடன் லாரி ஒன்று விபத்தில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் வருகிற மே 13-ம் தேதி அதாவது நாளை மறுநாள் 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

தற்போதைய சூழலில் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
ஆந்திரா தேர்தல்: ஆளுங்கட்சியான முதல்வர் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும், பாஜக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன.
தீவிர வாகன சோதனை: மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளிலும் 25 மக்களவைத் தொகுதிகளிலும் ஆந்திராவின் ஆளும் கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
கட்டுக் கட்டாய் பணம்: மேலும் கோடிக்கணக்கில் பணம் ஆந்திராவில் சிக்கிய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. நல்லஜார்லா மண்டல் அருகே ஆனந்த பள்ளி என்ற இடத்தில் வந்த போது அந்த வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுனர் காயமடைந்த நிலையில் அருகில் இருந்தோர் அவரை மீட்டனர்.
ரூ.7 கோடி: அப்போது அந்த வாகனத்தில் பெரிய பெட்டிகளில் பணம் இருப்பதாக தகவல் பரவிய நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த ஏழு பெட்டிகளிலும் கட்டு கட்டாக பணம் இருந்தது. அதை அடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பெரிய அட்டைப் பெட்டிகளில் இருந்தது சுமார் ஏழு கோடி ரூபாய் பணம் என்பதும் தெரிய வந்தது. தற்போது அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார் காயமடைந்த ஓட்டுனரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சைக்கு பிறகு அவரிடம் அந்த பணம் எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications