ரோட்டில் நின்ற காருக்குள் 6 பேர்.. அப்புறம் ஒருத்தர்.. ஹரியானாவையே உலுக்கிய சம்பவம்
சண்டிகர்: பஞ்ச்குலா என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரே காரில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தற்கொலை செய்துள்ளனர். காருக்கு வெளியே இருந்த ஏழாவது நபர், அங்குச் சென்றவர்களிடம் நானும் ஐந்து நிமிடங்களில் செத்து போவேன் எனக் கூறியதால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டது ஏன்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலா என்ற இடத்தில் வீட்டிற்கு வெளியே கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. உள்ளே ஆட்கள் இருந்தபோதிலும் கார் அங்கிருந்து கிளம்பவில்லை. அருகிலேயே ஒரு ஆண் உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அருகே சென்று விசாரித்துள்ளனர்.

அதிர்ச்சி
அப்போது தான் உள்ளே காரில் இருந்த ஆறு பேரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தானும் அடுத்த 5 நிமிடங்களில் உயிரிழந்துவிடுவேன் எனச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அந்த நபரின் பெயர் பிரவீன் மிட்டல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் உத்தரகண்ட் மாநிலத்தில் வசித்து வந்துள்ளார். ஹரியானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது தான் பஞ்ச்குலா பகுதியில் காரை நிறுத்தி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
என்ன நடந்தது
குடியிருப்பு பகுதியில் வெளிமாநில கார் நிறுத்தப்பட்டு இருந்ததால் உள்ளூர்வாசிகள் சிலர், காருக்கு வெளியே உட்கார்ந்து கொண்டிருந்த பிரவீனிடம் என்னவென்று கேட்டுள்ளனர். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நானும் என் சகோதரனும் அந்த நபரிடம் சென்று என்ன நடந்தது எனக் கேட்டோம். முதலில் அவர் ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதாகவும், ஹோட்டலில் ரூம் கிடைக்காததால் இங்கேயே நிறுத்தி இருப்பதாகவும் கூறினார். இது குடியிருப்பு பகுதி என்பதால் மார்கெட்டிற்கு காரை எடுத்துச் செல்லுமாறு கூறினார்.
அதிர்ச்சி கொடுத்த ஏழாவது நபர்
அந்த நபரும் சரி எனச் சொல்லிவிட்டு காரை எடுக்க எழுந்தார். ஆனால், அவரது பேச்சில் ஏதோ சந்தேகம் எழுந்தது. இதனால் நான் காரில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி பயங்கரமானது. காரில் 6 பேர் அசைவே இல்லாமல் கிடந்தனர். ஒருவர் மீது ஒருவர் வாந்தி எடுத்து இருந்தனர். கார் முழுக்க துர்நாற்றம் வீசியது. உடனே அந்த நபரைப் பிடித்துவிட்டேன். அப்போதுதான் அவர் கடன் அதிகம் சேர்ந்துவிட்டதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் தானும் ஐந்து நிமிடங்களில் உயிரிழந்துவிடுவேன் என்றான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்" என்று தெரிவித்தார்.
7 பேர் தற்கொலை
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காரில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிரவீன் மிட்டலும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அவரும் உயிரிழந்தார். பிரவீன் மிட்டல் அவரது பெற்றோர், பிரவீனின் மனைவி, அவரது மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கடன் பிரச்சினையால் இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பஞ்ச்குலா காவல் துணை ஆணையர் ஹிமாத்ரி கௌசிக், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் அமித் தஹியா விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலை போலவே தெரிவதாகவும் காரில் தற்கொலை கடிதமும் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications