98% இந்தியர்களுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி.. கொரோனா ஒன்றும் செய்யாது.. ஐஐடி கான்பூர் நம்பிக்கை
கான்பூர்: இந்தியாவில் 98 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருக்கிறது என்றும், இனி எந்த உருமாறிய கொரோனாவும் இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது எனவும் ஐஐடி கான்பூர் தெரிவித்துள்ளது.
சீனாவில் அதிகரித்திருக்கும் கொரோனா பரவலால் இந்தியாவிலும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், கான்பூர் ஐஐடியின் இந்தக் கருத்து நம்பிக்கையை தருவதாக உள்ளது.
அதே சமயத்தில், இந்த உருமாறிய கொரோனாவால் இந்தியாவில் இரண்டு மூன்று அலைகள் ஏற்படும் எனவும் அது கூறியுள்ளது.

சீனாவால் ஏற்பட்ட பீதி
கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டோம் என உலகமே நினைத்துக் கொண்டிருந்த வேளையில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. அதிலும், அங்கு பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால், மனிதர்கள் கொத்து கொத்தாக இறந்து வருகின்றனர். நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலும் அச்சம்
சீனாவில் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழலால் உலக நாடுகளும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. கடந்த 2020-ம் ஆண்டும் இதுபோலவே சீனாவில் வைரஸ் அலை ஏற்பட்டு, பின்னர் அனைத்து நாடுகளுக்கும் பரவியதே உலக நாடுகளின் இந்த அச்சத்துக்கு காரணமாக இருக்கிறது. இந்நிலையில், சீனாவுக்கு மிக அருகே அமைந்திருக்கும் நாடு என்பதால், இந்தியாவும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களை உச்சக்கட்ட தயார்நிலையில் வைத்திருக்குமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கணித அடிப்படையில் ஆய்வு
இது ஒருபுறம் இருக்க, சீனாவில் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் அதே வகை வைரஸ் தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் கடந்த ஆண்டை போலவே மிகப்பெரிய கொரோனா அலை இந்தியாவில் ஏற்படும் என சில மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், ஐஐடி கான்பூரில் உயிரியல், கணிதம், வேதியியல் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் இணைந்து கணித அடிப்படையில் இந்த புதிய கொரோனா குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர்.

"இயற்கையான எதிர்ப்பு சக்தி"
இதுகுறித்து கான்பூர் ஐஐடி பேராசிரியர் மனிந்த்ர அகர்வால் கூறுகையில், "முழுக்க முழுக்க கணித அடிப்படையில் நாங்கள் ஆய்வு செய்தோம். அதன்படி, தற்போது இந்தியாவில் 98 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான இயற்கையான எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் 5 சதவீதம் பேருக்குதான் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருந்திருக்கிறது. அதனால்தான் அங்கு தற்போது கடுமையான கொரோனா அலை ஏற்பட்டிருக்கிறது.

"ஒன்றும் ஆகாது"
தென் கொரியாவில் 40 சதவீதம் பேர், ஜப்பானில் 20 சதவீதம் பேருக்கு தான் இந்த எதிர்ப்பு சக்தி உள்ளது. அதனால் அங்கேயும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் ஒரு சதவீத மக்களுக்கு கூட கொரோனா எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை. எனவே, இந்த ஆண்டு அமெரிக்காவும் கொரோனா தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். இந்தியாவில் இந்த உருமாறிய கொரோனாவால் ஒருசில தொற்று அலை ஏற்படும். ஆனால், பெரிய அளவில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது" என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications