ரியல் மானிக் பாட்ஷா.. ஆற்றில் சிக்கிய இந்து பக்தர்களை காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞர்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பலர் இன்னும் கிடைக்கவில்லை. அரசும் பொதுமக்களும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் வெள்ளத்தின் போது இளைஞர் ஒருவர் ஆற்றில் குதித்து பக்தர்கள் சிலரை மீட்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டது. தற்போது அந்த இளைஞர் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.

கொண்டாட்டம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தவிர்க்கப்பட்டிருந்த தசரா பண்டிகை இந்தியா முழுவதும் இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தில் இந்த பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். விநாயகர் சதுர்த்தியை போல, துர்கை அம்மனின் சிலை வேறு ஒரு இடத்தில் செய்யப்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் கொண்டு வந்து வைத்து இம்மக்கள் வழிபாடு நடத்துவார்கள். அதேபோல கொண்டாட்டங்களின் கடைசி நாளில் சிலையை நீர் நிலைகளில் கரைப்பார்கள்.

திடீர் வெள்ளம்
இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள 'மல்' ஆற்றில் சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 40 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். தற்போது வரை 8 பேரில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த 5ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் காணாமல் போனவர்களை இன்றும் தேடி வருகின்றனர்.

மீட்புப் பணி
இவ்வாறு இருக்கையில் வெள்ளத்தில் பக்தர்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், பக்தர்களை மீட்க இளைஞர் ஒருவர் ஆற்றில் குதிப்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் அந்த இளைஞர் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. முகமது மானிக் எனும் இஸ்லாமிய இளைஞர்தான் இந்து பக்தர்களை காப்பாற்ற கரைபுரண்டோடும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்துள்ளார். இவர் ஆண்டு தோறும் துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம்.

9 பேர் மீட்பு
அவ்வாறு இந்த ஆண்டு பங்கேற்றபோது திடீரென வெள்ளம் ஏற்பட்டதும், அதில் பக்தர்கள் அடித்து செல்லப்பட்டதையும் கண்டுள்ளார். உடனடியாக தன்னிடமிருந்த பர்ஸ், வாட்ச், செல்போன் ஆகியவற்றை தனது நண்பரிடம் கொடுத்துவிட்டு வெள்ளத்தில் குதித்து தன்னால் முடிந்தவரை பக்தர்களை காப்பாற்றியுள்ளார். இவர் மட்டுமே 9 பக்தர்களை வெள்ளத்திலிருந்து மீட்டுள்ளார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து மேலும் பலரை மீட்டுள்ளார்.

மனிதாபிமானம்
இது குறித்து அவர் கூறியதாவது, "என்னுடைய குழந்தையின் வயதையொட்டியிருந்த குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்வதை என்னால் பார்த்துக்கொண்டு சும்மா நிற்க முடியவில்லை. அதனால்தான் அவர்களுக்கு உதவினேன். நல்வாய்ப்பாக நான் காப்பாற்றிய யாரும் உயிரிழக்கவில்லை. இந்த மீட்பு பணியில் எனது கால் விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. தீயணைப்பு துறை வீரர் ஒருவர் அவருடைய கைகுட்டையை கொடுத்து ரத்தம் வழியும் விரலில் கட்டிக்கொள்ளுமாறு கூறினார். பின்னர் அவருடன் சேர்ந்து மேலும் சிலருக்கு உதவ முடிந்தது" என்று கூறியுள்ளார்.
இந்து மத பண்டிகையில் ஏற்பட்ட விபத்தில் பக்தர்களை தைரியமாக காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞர் முகமது மானிக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications