அஸ்ஸாம் தேர்தல்: 15 ஆண்டுகால ஆட்சியை பறிகொடுக்கிறது காங்.- பாஜக கூட்டணிக்கு வெற்றி- ஏபிபி சர்வே
டெல்லி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் 15 ஆண்டுகாலமாக ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் என்று பாஜக தலைமையிலான கூட்டணி வெல்லும் என்றும் ஏபிபி நியூஸ்- நீல்சன் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
126 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாம் மாநில சட்டசபைக்கு ஏப்ரல் 4 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது காங்கிரஸ் கட்சி 122, பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜக 84, அஸ்ஸாம் கன பரிஷத் (ஏஜிபி) 24, போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்) 16 மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏயூடிஎப்) 76 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இங்கு காங்கிரஸ் கட்சி கடந்த 15 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்து வருகிறது.
இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஏபிபி நியூஸ்- நீல்சன் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள்:

காங். படுதோல்வி
ஆளும் காங்கிரஸ் படுதோல்வியைத் தழுவி 36 இடங்களைத்தான் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 இடங்களைப் பெற்றிருந்தது.

பாஜக அணி வெல்லும்
இம்முறை பாஜக கூட்டணியோ மொத்தம் 78 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் பாஜக 6, ஏஜிபி 9, பிபிஎப் 12 இடங்களில்தான் வென்றிருந்தன.
ஏயூடிஎப் 10 இடங்களிலும் சுயேட்சைகள் உள்ளிட்ட எஞ்சியோர் 2 இடங்களிலும் வெல்லலாம் என்கிறது இக் கருத்து கணிப்பு. கடந்த முறை ஏயூடிஎப் 18 இடங்களைக் கைப்பற்றி இருந்தன.

5% வாக்கை இழக்கும் காங்.
வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கடந்த 2011 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.6% பெற்றிருந்தது. இம்முறை 34% வாக்குகள்தான் கிடைக்குமாம்.

கூட்டணியால் உயரும் வாக்கு சதவீதம்
கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக 12.1%; ஏஜிபி 15.7%; போடோலாந்து மக்கள் முன்னணி 6% பெற்றிருந்தன. இந்த 3 கட்சிகளும் தற்போது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் நிலையில் மொத்தம் 44% வாக்குகளை அள்ள வாய்ப்புள்ளதாம்.
ஏயூடிஎப் கடந்த தேர்தலில் 12.3% வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்த தேர்தலில் 11% வாக்குகளை வெல்ல வாய்ப்புள்ளது என்கிறது சர்வே.

தருண் கோகய்
15 ஆண்டுகாலம் முதல்வராக இருக்கும் தருண் கோகயின் செயல்பாடுகள் மிகவும் நன்றாக இருந்ததாக 5%; நன்றாக இருந்தது என 35%; சுமாராக இருந்தது என 33% பேர் கூறியுள்ளனர். 22% பேர் தருண் கோகயின் செயல்பாடு மோசம் என்றும் 4% பேர் படுமோசம் எனவும் கூறியுள்ளனர்.
அஸ்ஸாம் வளர்ச்சிக்கு நரேந்திர மோடி அரசு உதவிகளை செய்து வருகிறது என 40% பேரும் 41% முந்தைய மன்மோகன்சிங் அரசுதான் நிறைய உதவிகள் செய்ததாகவும் கூறியுள்ளனர். இரு அரசுகளே அஸ்ஸாமுக்கு உதவி வருவதாக 6% பேர் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச அகதிகள் விவகாரம்
வங்கதேச அகதிகள் விவகாரம் இத்தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என 52% பேரும் அது ஒரு பிரச்சனையே அல்ல என 33% பேரும் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

தருண் கோகய்க்கு ஆதரவு
சிறந்த முதல்வராக தருண் கோகய்க்கு 39% பேரும் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான மத்திய அமைச்சர் சர்பானந்த் சோனோவாலுக்கு 29% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சர்பானந்த் சோனோவால், அஸ்ஸாம் கன பரிஷத் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் இலக்கு
வளர்ச்சியை முன்வைத்து பாஜக போட்டியிடுவதாக 44% பேரும் இந்துத்துவாவை முன்வைத்து போட்டியிடுவதாக 24% பேரும் கூறியுள்ளனர். இந்த இரண்டையும் முன்வைத்தே பாஜக போட்டியிடுவதாக 14% பேர் இந்த கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications