இமாச்சல பிரதேச முதல்வர் ராஜினாமா? மறுப்பு தெரிவித்த சுக்வீந்தர் சிங்.. காங்கிரஸ் ஆட்சி தப்புமா?
தரம்சாலா: இமாச்சல பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தால் அம்மாநில காங்கிரஸ் முதல்வர் சுக்வீந்தர் சிங் திடீரென்று ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சுக்வீந்தர் சிங் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள அரசியல் சூழல் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் உள்ள சிறிய மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. குளிர் பிரதேச மாநிலமான இங்கு ஆப்பிள் விவசாயம் அதிகளவில் நடக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது.

இமாச்சலில் ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழந்தது. புதிதாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.
காங்கிரஸ் சார்பில் புதிய முதல்வராக சுக்வீந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் அங்கு ராஜ்யசபா தேர்தல் நடந்தது. காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா சீட்டுக்கு 2 பேர் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அபிசேக் மான்வி சிங்கி, பாஜக சார்பில் ஹர்ஸ் மகாஜன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் 35 எம்எல்ஏக்கள் ஓட்டளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்ததால் காங்கிரஸின் அபிசேக் மான்வி சிங்கி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்றைய தினம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஓட்டளித்தனர். காங்கிரஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும், சுயேச்சை எம்எல்ஏக்கள் 3 பேரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதனால் பெரும்பான்மை இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அபிசேக் மான்வி சிங்கி தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் ஹர்ஸ் மகாஜன் வெற்றி பெற்றார். இதையடுத்து தான் சுக்வீந்தர் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இமாச்சல் பிரதேசத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள விக்ரமாதித்யா சிங் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார். இவர் முதல்வர் பதவி மீது கண்வைத்த நிலையில் அது நடக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் விக்ரமாதித்யா சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ளளார்.
மேலும் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியின் தொடர்புக்கு அப்பாற்பட்டு உள்ளனர். அவர்கள் பாஜகவினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இமாச்சல பிரதேச நிலைமையை சரிசெய்ய காங்கிரஸ் மேலிடம் 2 பொறுப்பாளர்களை நியமித்தது. கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹுடா ஆகியோரை நியமனம் செய்துள்ளது. இவர்கள் இமாச்சல பிரதேசத்தில் உள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி சுக்வீந்தர் சிங்கிற்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதன்படி சுக்வீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை காங்கிரஸ் பொறுப்பாளர்களிடம் வழங்கி உள்ளதாக இன்று காலையில் தகவல்கள் வெளியாகின. மேலும் சுக்வீந்தர் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய காங்கிரஸ் எம்எல்ஏக்களை சமாதானம் செய்து ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
அதுமட்டுமின்றி இன்றைய தினம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி புதிய முதல்வரும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இத்தகைய சூழலில் தான் தற்போது பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை என சுக்வீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுக்வீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒன்றை மிகவும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும். இடையூறுகளை எதிர்த்து சண்டையிட்டு மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்'' என உறுதியாக கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து இமாச்சலில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் ஆட்சி நிலைக்குமா? கவிழுமா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications