பழிக்குப்பழி? பெண்ணை முட்டி கொன்றுவிட்டு.. இறுதிச்சடங்கில் சடலம் மீதும் அட்டாக்.. அதிர வைத்த "யானை"!
புவனேஷ்வர்: ஒடிசாவில் யானை தாக்குதலால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்கிலும் யானை புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராய்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி மாயா முர்மு. இவர் கடந்த வியாழக்கிழமையன்று, வீட்டிற்கு அருகே இருந்த கிணற்றில் காலை 7 மணியளவில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது தல்மா வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த யானை ஒன்று வழிதவறி அப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட யானை
அப்போது கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த மூதாட்டியை பார்த்த யானை, திடீரென தாக்குதலில் ஈடுபட்டது. எதிர்பாராத நேரத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலால், 70 வயதான மூதாட்டி முர்முவுக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள், விரைவாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மருத்துவமனையில் உயிரிழப்பு
பின்னர் சம்பவ இடம் வந்த வனத்துறை அதிகாரிகள், யானையை விரட்ட விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பயங்கர காயங்களுடன் மீட்கப்பட்ட மூதாட்டி முர்மு, அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல், மூதாட்டி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

மூதாட்டிக்கு இறுதிசடங்கு
இதையடுத்து மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு, அவரது குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினத்தின் மாலை நேரத்திலேயே மூதாட்டிக்கு இறுதிசடங்கு நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து மூதாட்டியின் உடலை இறுதிமரியாதைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது உறவினர்கள், பொதுமக்கள் கூடியிருந்த போது இறுதிசடங்குகள் நடைபெற்ற நிலையில், திடீரென பெரும் சத்தத்துடன் யானை மீண்டும் அந்த இடத்திற்கு வந்துள்ளது.

இறுதிசடங்கிலும் அட்டகாசம்
பெரும் சத்தத்துடன் வந்த யானையைப் பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்து ஓடிச் சென்றனர். அப்போது கடுங்கோபத்துடன் மூதாட்டியின் சடலத்தை யானை தூக்கி வீசியது. மீண்டும் சடலத்தை யானை தாக்கி, தூக்கிபோட்டு மிதத்தது. இதனால் அங்கிருந்த ஏராளமானோர் பீதியில் உறைந்தனர். சிறிது நேரத்தில் அட்டகாசம் செய்த யானை அங்கிருந்து சென்ற நிலையில், மூதாட்டிக்கு இறுதிசடங்கை முடித்துள்ளனர். ஒரே நாளில் மூதாட்டியை இரண்டு முறை தாக்கிய யானை, பழிக்குப்பழி வாங்கியதா என்ற சந்தேகம் அங்கிருந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications