அப்படியே ஜெயலலிதா மாதிரி.. முதலமைச்சராகத் தான் கால் வைப்பேன்! சவாலில் ஜெயித்த சந்திரபாபு நாயுடு!
அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே சட்டசபையில் சவால் விட்டு ஜெயித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டது.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோ பாஜக பவன் கல்யாண் ஜனசேனா கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். காங்கிரஸ் கம்யூனிஸ்ட்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் கண்டது.
ஆந்திர தேர்தல்: இந்த நிலையில் பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தங்களது தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க கோரி ஆளுநரை சந்தித்து கடிதம் வழங்கினார். ஆளுநர் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தார்.
ஜெயலலிதா: இதையடுத்து இன்று விஜயவாடா விமான நிலையம் அருகே இருக்கும் கேசரப்பள்ளி என்ற பகுதியில் பிரம்மாண்ட பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ பி நட்டா, உள்ளிட்டோரும் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆந்திராவின் முதலமைச்சர் ஆக சந்திரபாபு நாயுடு பதவியேற்று கொண்டார். அவருடன் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.
சவால் விட்ட சந்திரபாபு: பிரதமர் நரேந்திர மோடியை கட்டி அணைத்து நன்றி தெரிவித்த போது சந்திரபாபு நாயுடுவின் கண்களில் லேசாக கண்ணீர் கசிந்தது. காரணம் சட்டசபையில் அவமானம், சிறை வாழ்க்கை என பல சிக்கல்களை சந்தித்தார். முன்னதாக இனி முதலமைச்சராக தான் இனி சட்டசபைக்குள் நுழைவேன் என்ற சவாலில் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

என்ன நடந்தது?: தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு,"தொடர்ந்து என்னை அவமானப்படுத்தி வருகிறார்கள். என் மனைவி குறித்தும் அவதூறாக பேசி இருக்கிறார்கள். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய நபர்களுக்கு பதிலளிக்க முயன்ற போது மைக்கை ஆப் செய்து விட்டார்கள். இதன் காரணமாக சட்டசபையில் இருந்து நான் வெளிநடப்பு செய்தேன். இப்போது சொல்கிறேன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகுதான் இந்த அவைக்கு திரும்புவேன். அதுவரை ஆந்திரா சட்டசபையில் கால் வைக்க மாட்டேன் எனக் கூறியிருந்தார். இதையடுத்து மூன்று ஆண்டுகள் சட்டசபைக்கு சந்திரபாபு நாயுடு செல்லாத நிலையில் தற்போது முதலமைச்சராக எடுத்த சபதத்தை முடித்து சட்டசபைக்குள் கால் வைக்கிறார்.
ஜெயலலிதா: இதே போல் தான் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இனி சட்டசபைக்குள் கால் வைத்தால் முதலமைச்சராகத்தான் கால் வைப்பேன் எனக்கூறி சபதத்தில் ஜெயித்தார். 1989ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவை திமுகவினர் சட்டசபைக்குள் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தற்போது வரை உலாவி வருகிறது. தமிழக சட்டசபையின் கருப்பு நாள் என அதிமுகவினர் அந்த நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த நிகழ்வுக்கு பிறகு பேசிய ஜெயலலிதா மீண்டும் இந்த சட்ட சபையில் கால் வைத்தால் முதலமைச்சராக மட்டுமே வைப்பேன். அதுவரை இங்கு வரமாட்டேன் என கூறினார். சொன்னது போலவே 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகவே கால் வைத்தார் என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications