போதிதர்மராக சித்தரிக்கப்படும் ஆனந்தய்யா.. ஆந்திராவில் அரசியலாக மாறிய சித்த வைத்திய லேகியம்!
அமராவதி: கொரோனா நோயாளிகளுக்கு மருந்தை அளித்து வந்த ஆனந்தய்யாவை ஆந்திர மக்கள், போதி தர்மராக சித்தரித்து போஸ்டர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஆனந்தய்யாவின் மருந்து கிடைத்தால் உயிர் பிழைத்துவிடலாம் என்ற அளவிற்கு நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆனந்தய்யாவின் கொரோனா லேகியம் ஆந்திர அரசியலில் தற்போது பெரிய அளவில் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் லேகியத்திற்கு ஆந்திர அரசு உடனடியாக மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திரமோகன் வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா மருந்து
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினம் அடுத்த மூலக்கூறு கிராமத்தில் வசிப்பவர் ஆனந்தய்யா, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு தயாரித்து வழங்கிய நாட்டு மருந்து நல்ல பலன் அளிப்பதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கவும் 6 விதமான மூலிகை பொருட்களை கொண்ட லேகியத்தை ஆனந்தய்யா வழங்கி வந்தார்..

ஆக்சிஜன் அவசியமில்லை
ஆக்சிஜன் மூலம் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கண்களில் மூலிகை பொருட்களால் தயார் செய்த திரவத்தை கண்ணில் விட்டதன் மூலம் சில மணி நேரங்களிலேயே ஆக்சிஜன் தேவை இல்லாத நிலைக்கு வந்தார்கள். இதை பார்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பலர் நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணா பட்டினம் அடுத்த முத்துக்கூறு கிராமத்துக்கு விரைந்தனர். ஆனந்தய்யாவின் மருந்தை பெறுவதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் கூட்டம் கூட்டமாக திரண்டனர். இந்த மருந்துக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டது.

தற்காலிகமாக தடை
ஆனால் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்த காரணத்தால் கொரோனா பரவும் அபாயமும ஏற்பட்டது. இதனால் மருந்து தருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ஆனந்தய்யா தயாரித்து வழங்கும் ஆயுர்வேத லேகியத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அத்துடன் தற்காலிமாக மருந்தை வழங்குவதை நிறுத்தவும் உத்தரவிட்டார்.

தீங்கு இல்லை
இதனிடையே முதல்வரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆயுர்வேத லேகியத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவில் தீங்கு விளைவிக்கும் பொருள் லேகியத்தில் இல்லை என்பது தெரியவந்தது. ஐசிஎம்ஆர் குழுவும் இந்த லேசியத்தை ஆய்வு செய்ய உள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளுக்கு பிறகே மக்களுக்கு தர அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது.

உடனே குணமாகினார்
இதனிடையே ஆனந்தய்யாவின் மருந்து மூலம் கொரோனா நோய் குணமாகுவதை அறிந்து, தெலுஙகானா மாநிலம் பெத்தபள்ளியில் இருந்து 700 கிலோமீட்டர் பயணம் செய்து மல்லாரெட்டி என்ற இளைஞர், தனது தாயாருடன் லேகியம் பெற வந்திருக்கிறார். ஆனால் ஆனந்தய்யா மருந்து வழங்குவதை நிறுத்தி வைத்தள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தவித்துப்போன மல்லாரெட்டி, ஒருகட்டத்தில் மயங்கி கீழே விழுந்துவிட்டார். இதனை அறிந்து ஆனந்தய்யாவிடம் பணி புரியும் ஊழியர்கள் சிலர், மல்லாரெட்டிக்கு ஆயுர்வேத மருந்தை பெற்றுக்கொடுத்தனர். இதனையடுத்து மல்லாரெட்டி சுவாசப்பிரச்சனை நீங்கி குணமடைந்துள்ளார்.

அனுமதி வழங்க கோரிக்கை
இதனை அறிந்த தெலுங்குதேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் சந்திரமோகன், ஆனந்தய்யா அளிக்கும் கொரோனா லேசியத்திற்கு ஆந்திர அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆயுஷ் அங்கீகரித்துள்ளதால் இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏழை மக்களுக்கு உடனடியாக இந்த லேசியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மக்களுக்கு நாம் தராவிட்டால் கடவுள் கூட நம்மை மன்னிக்க மாட்டார்" என்றார்.

ஆனந்தய்யா போஸ்டர்
இதற்கிடையே சமூக வலைதளங்களில் 7ம் அறிவு திரைப்படத்தில் வரும் போதி தர்மரைப் போல் ஆனந்தய்யாவை சித்தரித்து போஸ்டர்களும் வீடியோக்களும் ஆந்திராவில் பரவி வருகிறது. அந்த படத்தில் போதி தர்மராக வரும் சூர்யா, சீன மக்கள் நோயால் பாதிக்கப்பட்ட போது மருந்து கொடுத்து காப்பாற்றுவார். அதுபோல் ஆனந்தய்யா காப்பாற்றுவதாக அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications