கேரளா விளையாட்டுதுறை அமைச்சர் மீது அஞ்சு பாபி ஜார்ஜ் புகார்: முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு
திருவனந்தபுரம்: கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயராஜன் தன்னை மிரட்டியதாக மாநில விளையாட்டு கவுன்சில் தலைவரும், முன்னாள் சர்வதேச தடகள வீராங்கனையுமான அஞ்சு பாபி ஜார்ஜ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை முதல்வர் பினராயி விஜயன் மறுத்தார்.
பெங்களூரில் இருந்து கொண்டு கேரள விளையாட கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க அஞ்சு விமானத்தில் வர கேரள மாநிலத்தின் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு டிக்கெட் கட்டணத்தை அளித்துள்ளது. இது நல்ல அணுகு முறையல்ல என்றுதான் எங்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார் என்றும் முதல்வர் கூறியிள்ளார்.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜை கேரள விளையாட்டு கவுன்சில் தலைவராக உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அரசு நியமித்தது. இவர் பெங்களூரில் சுங்க இலாகா துறை அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜெயராஜனை அஞ்சு பாபி ஜார்ஜ் மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றார். அப்போது அமைச்சர் ஜெயராஜன் தன்னை அவமதித்து மிரட்டியதாக அஞ்சு பாபி ஜார்ஜ் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து புகார் கூறினார். கேரளாவில் புதிய விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெயராஜனை சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்கு நான் சென்றேன். அப்போது விளையாட்டு துறையில் பணிபுரியும் சில ஊழியர்களை அவர்களது குடும்ப நலன்கருதி இடமாறுதல் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தேன். ஆனால் அந்த பட்டியல் முழுவதையும் நிராகரித்த அமைச்சர், என்னை மிரட்டும் தொனியில் பேசினார்.
விளையாட்டு கவுன்சிலில் அனைவரும் ஊழல்வாதிகள் என்றும் அவர் கூறினார். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என கருதினீர்களா? என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று அவர் மிரட்டலும் விடுத்தார். இது எனக்கு மிகவும் அவமரியாதையாக இருந்தது.
நான் பணிபுரியும் பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு விமானத்தில் வர கடந்த அரசு எனக்கு அனுமதி அளித்திருந்தது. இது தொடர்பாகவும் அமைச்சர் ஜெயராஜன் மனம் நோகும்படி கேள்விகளை கேட்டார். இனி விமானத்தில் செல்லக்கூடாது என்றும் கூறினார்.
அமைச்சர் ஜெயராஜனுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் மாநில தலைவர் சுதீரன் உள்பட பலரும் அமைச்சர் ஜெயராஜனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு
அஞ்சு பாபி ஜார்ஜின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ஜெயராஜன் அவரை தான் மிரட்டவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன் , அஞ்சு பாபி ஜார்ஜிடம் அமைச்சர் அவமரியாதையுடன் நடந்து கொள்ளவில்லை. அவரது விமான பயணம் குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அது எப்படி அவமரியாதையாகும் என்று கேள்வி எழுப்பினார்.
என்னை அவர் வந்து சந்தித்த போது அஞ்சு பாபி ஜார்ஜ் நடந்த விபரங்களை கூறினார். அப்போது அவர் அமைச்சர் அவமரியாதையுடன் நடந்து கொண்டதாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் முதல்வர் கூறினார். அஞ்சு பாபி ஜார்ஜை அரசியல் சார்புடையவராக நாங்கள் கருதவில்லை என்று நான் அவரிடம் கூறினேன் என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications