• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி அரசு மருத்துவமனை: கர்ப்பிணிகள் மோசமாக நடத்தப்படுகிறார்களா?

By Bbc Tamil
|

28 வயது சுமனுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு எப்போது திட்டமிடுகிறீர்கள் என கேட்டதும் அவர் சோகத்தில் ஆழ்ந்தார்.

கர்ப்பிணி
AFP
கர்ப்பிணி

இன்னொரு குழந்தைக்கு திட்டமிடுவது குறித்து பிரச்னை இல்லை . ஆனால் முதல் குழந்தையை பெற்றெடுத்தபோது மருத்துவமனையில் நிகழ்ந்த மோசமான அனுபவம் அவரை கடுமையாக பாதித்திருக்கிறது.

டெல்லியில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில்தான் சுமனுக்கு பிரசவம் நிகழ்ந்தது. தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசிய அவர்,

'' எனக்கு இது முதல் குழந்தை. ஆகவே பிரசவத்தின் போது என்ன நடக்கும் என்பது பற்றியெல்லாம் அறிந்திருக்கவில்லை. நான் ஏற்கனவே பதட்டமாக இருந்தேன். ஓர் பெரிய அறையில் பல பெண்கள் பிரசவத்துக்காக வந்திருந்தார்கள். அவர்கள் வலியால் கத்தினார்கள். தங்கள் மீது அனுதாபம் காட்டப்படுவதற்கு பதிலாக அவர்கள், திட்டு வாங்கிக்கொண்டிருந்தார்கள். இது எனக்கு மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியது.''

''அந்த வார்டில் மின்விசிறி இருந்தது, ஆனால் வேலை செய்யவில்லை. வெயில்காலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் அங்கே மூன்று பெண்களுக்கு ஒரு படுக்கை மட்டுமே இருந்தது. மூன்று பேருக்கும் பிரசவ வலி இருந்தது. அனைவருமே படுத்துக் கொள்ள விரும்பினார்கள். ஆனால் அங்கே அது சாத்தியப்படும் விஷயமல்ல. மூன்று பேரும் நெருக்கிக்கொண்டு அமர்ந்திருந்தனர். எங்கள் மூவரில் யாராவது ஒருவர் கழிவறைக்கோ அல்லது ஒரு மெல்லிய நடைக்கு சென்றால் மட்டுமே எங்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்ற நிலை'' என்கிறார்.

'' நான் ஒரு படுக்கையில் படுத்திருந்தபோது அருகில் உள்ள ஓர் படுக்கையில் பிரசவ வலியால் படுத்திருந்த பெண்ணுக்கு திடீரென வலி அதிகமானது.வியர்த்துக்கொட்டி அவளது வாய் வறண்டு போனது. ஆனால் அவரை கவனிக்க யாரும் இல்லை. அவள் சற்று சத்தமாக முனக துவங்கியதும்தான் ஒரு செவிலியர் பெண் வந்தார்.அப்பெண்ணை பரிசோதித்த செவிலியர் குழந்தை இன்னும் வெளிவரவில்லை என்றார். பரிசோதனையின் போது அவர் முனகிக்கொண்டிருந்த பெண்ணை திட்டியது மட்டுமின்றி பலமுறை அடித்தார்.''

கர்ப்பிணி
AFP
கர்ப்பிணி

'' அங்கே செவிலிப் பெண் பயன்படுத்திய வார்த்தைகளை கேட்கும் ஒருவர், குழந்தையை பெற்றெடுப்பது அவமானப்படவேண்டிய செயல் என்பது போல உணரவேண்டிய நிலை இருந்தது. ' முதலில் சந்தோஷமாக இருக்க வேண்டியது பின்னர் வலியால் கத்த வேண்டியது' என அவர்கள் கூறினார்கள். குழந்தை பெற்றெடுக்க வேண்டுமெனில் வலியை அனுபவித்தாக வேண்டும். இப்படி செவிலியர்கள் பேசலாமா? நாம் என்ன மிருகங்களா? நான் இந்நிகழ்வை பார்த்ததில் எனது வலி காணாமல் போனது'' என விவரிக்கிறார் சுமன்.

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் இது போன்று நடத்தப்படுவது பொதுவான ஒரு விஷயமாகி வருகிறது. டெல்லியில் உள்ள இந்த ஒரு மருத்துவமனையில் என்றில்லை பல அரசு மருத்துவமனைகளிலும் இந்நிலை நீடிக்கிறது.

மத்திய அரசும் இந்நிலை குறித்து அறிந்ததும், ' இலக்கு வழிகாட்டுதல்கள்' என 2017-ல் அறிவிக்கை வெளியிட்டது. மருத்துவனைகளில் நடக்கும் தவறான நடத்தைகள் குறித்தும் மருத்துவமனையில் பின்பற்ற வேண்டிய அம்சங்கள்

குறித்தும் அதில் இருந்தது. மாநில அரசின் வாயிலாக இந்நடைமுறையை செயல்படுத்த முயற்சித்தது மத்திய அரசு.

அதே நேரத்தில், 'மரியாதை' என்ற பெயரில் சண்டிகரின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுநிலை படிப்பு நிறுவனம்' ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கர்ப்பிணிகளை மோசமாக நடத்துகிறார்களா செவிலியர்கள்?
BBC
கர்ப்பிணிகளை மோசமாக நடத்துகிறார்களா செவிலியர்கள்?

ஆராய்ச்சி சொல்வது என்ன?

மருத்துவமனை ஊழியர்கள் பெண்களிடம் தவறான நடத்தையை காண்பிப்பதும், திட்டுவதும், அவர்கள் சொல்பேச்சை கேட்காவிட்டால் பயமுறுத்துவதும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் மன்மீத் கவுர் கூறுகையில், '' பிரசவத்தின் போது திட்ட வேண்டியது அவசியம் என ஏற்கனவே முன்முடிவு செய்துகொண்டுள்ளார். திட்டுவது அந்நேரத்தில் உதவும் என செவிலியர்கள் கூறுகின்றனர்'' என்றார்.இந்த ஆராய்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் இனயாட் சிங் பேசுகையில், ''மருத்துவமனையில் ஒரு செவிலியர் நிறைய நோயாளிகளை பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இது போன்ற நேரங்களில் அவர்கள் எரிச்சல் அடைவது இயற்கையானது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனி கவனம் செலுத்த முடியாது என்கின்றனர். ஆனால் அன்புடனும் மரியாதையுடனும் பேசுவது முடியாத செயல் ஒன்றும் இல்லை. நிறைய செவிலியர்கள் நல்லபடியாக நடந்து கொள்கிறார்கள்'' என்றார்.

சரியான பயிற்சி அவசியம்

சஞ்சய் காந்தி மருத்துவமனையின் துணை மருத்துவ கண்காணிப்பு அதிகாரி மன்மோகன் சிங்கிடம் பேசியபோது, ''நோயாளியை திட்டுவது தான் பிரச்னை எனில் நாங்கள் செவிலியர்களுக்கு முறையான கவுன்சலிங் தருவோம். இதன்மூலம் நோயாளிகளிடம் அன்பாக பேசுவது எப்படி என அறிந்துகொள்வார்கள். மேலும் இது ஒரு தனிப்பட்ட பிரச்னை. ஏனெனில் எங்களுக்கு இதுவரை எந்தவொரு நோயாளியும் தான் தாக்கப்பட்டதாகவும், கொடுமை செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கவில்லை'' என்கிறார்.

ஆனால் அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற தவறான நடத்தைகள் இருப்பதை ஒப்புக்கொள்கிறார். '' இது போன்ற பிரச்னைகளுக்கு காரணம் என்னவெனில் பெரும்பாலான செவிலியர்கள் எப்படி நோயாளிகளை அணுகுவது, உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற மென் திறன் பயிற்சிகளை பெறவில்லை. இவை மருத்துவ படிப்பில் பாடங்களில் சேர்க்கப்படவேண்டியது அவசியம். மேலும் இவர்களுக்கு பயிற்சியும் தரப்படவில்லை'' என்றார்.

பிரசவம்
Getty Images
பிரசவம்

ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் காரணம் என நினைக்கிறார் மன்மோகன். ஒவ்வொரு மருத்துவமனையிலும் செவிலியர் அல்லது மருத்துவர்களின் தேவையில் 15-20 சதவீத இடங்கள் காலியாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவமனையில் அதிக நோயாளிகளும் குறைவான செவிலியர் மற்றும் மருத்துவர்களும் உள்ளனர். நோயாளிகள், செவிலியர், மருத்துவர் விகிதம் முறைப்படி இருக்கவேண்டும் என்கிறார்.

''இன்றைய தேதியில் மருத்துவர்களுக்கான பணியிடமும் காலியாக உள்ளது. அரசுக்கு போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை. டெல்லியில் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் இந்நிலை தொடர்கிறது. மற்ற மாநிலங்களில் மருத்துவமனைகள் மேம்பட்டால் நோயாளிகள் டெல்லி வர வேண்டிய அவசியம் குறையும்;; என்கிறார் பாபு ஜெகஜீவன் ராம் மருத்துவனையின் அதிகாரி டாக்டர் பிரதீபா.

கவுன்சிலிங் தேவை

இந்த விவகாரத்தில் பொதுவாக பெண்கள் நேரடியாக புகார் தெரிவிப்பதில்லை. அதற்கு பதிலாக இன்னொரு பெண்ணுக்கு மோசமான நிலை நேர்ந்தது என கூறுவது வழக்கமாகிவிட்டது.

ஆகவே பெண்களுக்கும் மருத்துவமனை நடைமுறைகள், வலி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கவுன்சலிங் தேவை.

அரசு வெளியிட்ட ''இலக்கு வழிகாட்டுதல்'' குறித்த சில முக்கியமான அறிவுறுத்தல்கள் இவை.

  • பிரசவத்தின் போது தனி அறை பெண்களுக்கு கொடுக்கப்படுத்தன் மூலம் அவர்களுக்கு தனியுரிமையை தரவேண்டும்.
  • குடும்ப உறுப்பினர்கள் வலி ஏற்படும்போது உடன் இருக்கலாம்.
  • பிரசவத்தின்போது, சம்பந்தப்பட்ட பெண் தனது வசதிக்கேற்ப உடல் என்ன நிலையில் (Position) இருக்க வேண்டும் என விரும்புகிறாரோ அதற்கு இடம் கொடுக்க வேண்டும்.
  • மேசைக்கு பதிலாக பிரசவத்துக்கான கட்டிலை பயன்படுத்தவும்.
  • கர்ப்பிணி பெண்ணை உடல் ரீதியாகவோ தாக்கவோ திட்டவோ கூடாது.
  • குழந்தை பிறந்த பிறகு பரிசோதனை செய்யவோ, மருந்து தரவோ பணம் வாங்கக்கூடாது .

பிற செய்திகள்:


BBC Tamil

மேலும் டெல்லி செய்திகள்View All

 
 
 
English summary
28 வயது சுமனுக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தைக்கு எப்போது திட்டமிடுகிறீர்கள் என கேட்டதும் கடும் சோகத்துக்குள்ளானார். முதல் குழந்தையை பெற்றெடுத்தபோது மருத்துவமனையில் நிகழ்ந்த மோசமான அனுபவம் அவரை கடுமையாக பாதித்திருக்கிறது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X